12 August 2017

பூக்கள் அறிவோம் (11-20)

முந்தைய பதிவின் தொடர்ச்சியாக 
இன்னும் சில பூக்கள் அறிவோம். 


11.  கற்பூரவல்லிப்பூ
(coleus aromaticus)


  
கற்பூரவல்லி, ஓமவல்லி என்றெல்லாம் அழைக்கப்படும் சதைப்பற்றுள்ள இத்தாவரத்தின் மருத்துவகுணங்களால் மூலிகைகளின் தாய் என்று பெருமைப்படுத்தப்படுகிறது. உணவு, மருத்துவம் இவற்றோடு அழகுக்காகவும் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது. மேற்கத்திய உணவுகளில் இறைச்சி, மீன் இவற்றின் கவுச்சி போக்குவதற்காக அவற்றோடு சேர்த்து சமைக்கப்படுகிறது. இதன் இலைகளைப் பிழிந்தெடுத்துக் கிடைக்கும் சாறு சளி,கோழையை அகற்றும் சக்தி கொண்டது. இலைச்சாற்றை உடலின் மேலே தடவிக்கொண்டால் இதன் வீரியம் நிறைந்த வாசத்துக்கு கொசு, பூச்சிகள் அண்டாது. சும்மா ஒரு கிளையை ஒடித்துவைத்தாலே வளரக்கூடியது. Mexican mint, Indian mint, soup mint, thick leaf thyme, French thyme, Spanish thyme, Cuban oregano என நாட்டுக்கு நாடு செல்லப்பெயர்களால் கொண்டாடப்படுகிறது.


12. உன்னிப்பூ
(lantana camara)

மத்திய அமெரிக்காவைச் சார்ந்த லாண்டானா (lantana camara) நமக்கு மிகவும் பரிச்சயமான தாவரம்தான். வேலியோரங்களில் வண்ணவண்ணப் பூக்களால் அழகு காட்டும் உன்னிப்பூ செடிதான் அது. கொத்துக்கொத்தாய் மலரும் பூக்கள் முதிர்ச்சி பொறுத்து நிறம் மாறும். அதனால் ஒரே கொத்தில் இரண்டு மூன்று நிறப்பூக்கள் காட்சியளிப்பது கண்களுக்கு விருந்தாகும். பார்வைக்கு அழகாக இருக்கும் இத்தாவரம் கால்நடைகளையும் நாய் பூனைகளையும் பாதிக்குமளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. இதையுண்ணும் விலங்குகளின் கல்லீரல் பாதிக்கப்படுவதோடு இந்தச்செடி வெளிவிடும் ஒருவகை இரசாயனம் காற்றில் பரவி அக்கம்பக்கத்து செடிகளையும் அழிக்கவல்லது. நச்சுத்தன்மை மிகுந்த இச்செடியின் காய்கள் பழுத்துவிட்டால் நச்சுத்தன்மையை இழந்து மனிதர்களும் பறவைகளும் விலங்குகளும் தின்பதற்கு ஏதுவாக மாறிவிடுகிற அதிசயத்தை என்னவென்பது? விதைபரவல் நடைபெற இதுவும் ஒரு தந்திரம் போலும். ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளில் களைப்பயிராக அறியப்படும் இதற்கு பல்வேறு மருத்துவகுணங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.13. சூரியகாந்தி
ring of fire (Helianthus annuus)

நெருப்பு வளைய சூரியகாந்தி

மஞ்சள் சூரியகாந்தி


சூரியன் போகும் திசையெல்லாம் தலைதிருப்பிப் பார்த்திருக்கும் சூரியகாந்திப்பூக்கள் வகையில் இந்த நெருப்பு வளையமும் ஒன்று. கருப்பு வளையத்தைச் சுற்றி தீப்பற்றி எரிவது போல இதன் மத்தியும் இதழ்களும் இருப்பதால் இப்பெயர். தோட்டத்துக்கு அழகுசேர்க்கும் இம்மலரின் தேனை உறிஞ்ச தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் படையெடுக்கும். மலர் காய்ந்தபின் விதைகளைத் தின்ன பறவைகள் படையெடுக்கும். தோட்டத்தை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள உதவும் அற்புதமான செடி இது. சூரியகாந்தி விதைகளிலிருந்து சூரியகாந்தி எண்ணெய் எடுக்கப்படுகிறது. விதைகளை அப்படியேவும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உக்ரைனின் தேசிய மலர், அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தின் மாநில மலர், ஜப்பான் நகரத்தின் நகர மலர் என்ற சிறப்புகளை உடையது சூரியகாந்தி.  


14. கருநொச்சி
(Vitex agnus-castus)
குறுந்தொகைப்பாடல் ஒன்று.. தலைவியைக் காண இரவில் வருவேன் என்று சொன்ன தலைவன் வரவில்லை. மறுநாள் அவனைக் கண்ட தோழி சொல்கிறாள்.. நேற்றிரவு ஊரே தூங்கிவிட்டது. ஆனால் நானும் தலைவியும் தூங்கவில்லை. எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள உயரமான ஏழில் என்னும் குன்றின் உச்சியில் உள்ள நொச்சி மரத்தின் நீலமணி போன்ற பூக்கள் உதிரும் சத்தத்தைக் கேட்டபடியே படுத்திருந்தோம் என்கிறாள். எங்கோ தூரத்துக் குன்றின் உச்சியில் நொச்சிப்பூ உதிரும் ஓசை கூட காதில் விழுமளவுக்குத் துல்லியமாய்க் காதைத் தீட்டிவைத்திருந்தோம். நீ வந்திருந்தால் எங்களுக்குத் தெரியாமல் போயிருக்குமா... நான் வந்தேன், நீங்கள்தான் தூங்கிவிட்டீர்கள் என்று சொல்லிவிடாதே என்று மறைமுகமாய் எச்சரிக்கிறாள். அதென்ன நொச்சி அவ்வளவு பெரிய பூவா.. அது உதிரும் ஓசையில் நிலமே நடுங்குமா என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லாமல் நொச்சிப்பூக்கள் தும்பையினும் சிறியவை என்பதை நம்மில் பலரும் அறிவோம்.


மயிலின் அடி போன்ற இலைகளைக் கொண்டது என்றும் நீலமணிகளைப் போன்ற மலர்களைக் கொண்டது என்றும் நொச்சி இலைகளையும் மலர்களையும் சங்கப்பாடல்கள் வர்ணிக்கின்றன. கபிலர் குறிப்பிடும் சிந்துவாரம் என்னும் மலரும் இதுதானாம். பண்டைய கிரேக்கத்தில் நொச்சிச்செடி கற்பின் அடையாளமாகப் பார்க்கப்பட்டதால் இதற்கு புனித மரம் (chaste tree) என்ற பெயரும், இதன் விதைகளை மிளகுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் வழக்கம் சில நாடுகளில் இருப்பதால் துறவிகளின் மிளகு (monk’s pepper) என்ற பெயரும் உண்டு. உடல்வலி தீர நொச்சி இலைகளை வெந்நீரில் போட்டுக் குளிப்பதுண்டு. உள்ளும் புறமுமான பலவித நோய்களைத் தீர்க்க நொச்சியின் இலைகள், பூக்கள், வேர், பட்டை, விதைகள் அனைத்துமே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன.

15. பிரம்மந்தண்டு பூ
Mexican prickly poppy (argemone Mexicana)பாப்பி மலர்களைப் போன்றிருப்பதாலும். முட்செடியாக இருப்பதாலும், மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டதாலும் இதற்கு Mexican prickly poppy அல்லது Mexican poppy என்று பெயர். தமிழில் இதற்கு பிரம்மந்தண்டு, வீமன் தண்டு, குடியோட்டிப் பூண்டு, குறுக்குச்செடி என்று பல பெயர்கள். செடியை ஒடித்தால் மஞ்சள் நிறத்தில் பால் வடியும். கால்நடைகளுக்கு நச்சாகும் இச்செடி பல மருத்துவகுணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. சித்த மருத்துவத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. பிரம்ம தண்டின் இலை, பால், வேர், விதை அனைத்துமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மலேரியாவை குணப்படுத்த இதன் இலைச்சாறு பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூக்களை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரைக் கொண்டு கண்களைக் கழுவிவந்தால் பார்வைத் தெளிவு கிடைக்கும் என்கிறது ஒரு தகவல்.

16. கொடுவேரி மலர்கள்
(Plumbago flowers)
அக்கினி, சித்ரகா, சித்திரமூலம், அனல், கொடுவேலி எனப் பல்வாறாக அழைக்கப்படும் கொடுவேரி (plumbago zeylanica) வேலிகளில் படர்ந்து இல்லங்களுக்கு அழகு சேர்ப்பதோடு மருத்துவகுணமும் வாய்ந்தது. வாதம், வெண்குஷ்டம், மூலம் போன்ற நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் வேரைப் பொடி செய்து தேன் கலந்து உபயோகிக்கிறார்கள். கொடுவேரி இனத்தில் வெள்ளை, சிவப்பு, நீலம் என பல வண்ணங்களில் சுமார் 20  வகைகள் உள்ளன. சிவப்பு வகைதான் குறிஞ்சிப்பாடலில் குறிப்பிடப்படும் செங்கொடுவேரி மலர்கள். Plumbum என்னும் லத்தீன் வார்த்தைக்கு ஈயம் என்றும் agere என்றால் போல என்றும் பொருளாம். இலைகளின் அடிப்புறத்தில் வெண்ணிற மாவுப்படலம் காணப்படுவதுதான் இப்பெயருக்குக் காரணம் என்றும் ஈய நச்சுக்கு இது மருந்தாகப் பயன்படுவதுதான் காரணம் என்றும் இருவேறு கருத்து உள்ளது.


 17. ப்ளூமேரியா
Frangipani (plumeria)
  
பாதிரிப்பூ, பாதுரிப்பூ, நெல சம்பங்கி, பன்னீர் மல்லி, நாகவல்லிப்பூ, அலரி, தேமாப்பூ, கள்ளி மந்தாரை, நாவில்லா அலரி என தமிழில் பல பெயர்கள் இந்தப் பூவுக்கு. (சங்கப்பாடல்கள் பாதிரிப்பூ என்று பாடலம்பூவைக் குறிப்பிடுகின்றன) மரமாகவோ குத்துச்செடியாகவோ வளரும் இவை பூக்களின் அழகுக்காகவும் நறுமணத்துக்காகவும் வீடுகளில் விரும்பி வளர்க்கப்படுகின்றன. சும்மா வெட்டிவைத்தாலே துளிர்த்துக்கொள்ளும் இவ்வினத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. துளியும் தேனற்ற பாதிரிப்பூக்கள் தங்கள் நறுமணத்தால் பூச்சிகளைக் கவர்ந்திழுத்து ஏமாற்றி மகரந்தச் சேர்க்கை நிகழ்த்துகின்றன. 


பசிபிக் தீவுவாசிகள் இப்பூக்களைக் கோத்து மாலையாக அணிந்துகொள்கின்றனர். அத்தீவுகளின் பெண்கள் இப்பூவினை காதோரம் சூடித் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். வலக்காதோரம் அணிந்தால் இணையைத் தேடுவதாகவும் இடக்காதோரம் அணிந்தால் இணை இருப்பதாகவும் பொருளாம். தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் இம்மரம் ஆவிகளின் குடியிருப்பாக அறியப்படுகிறது. வங்காளத்தில் ஈமச்சடங்குகளின்போது இப்பூக்கள் அவசியம் இடம்பெறுகின்றன. ஆனால் இந்தியாவிலும் இலங்கையிலும் இம்மரம் இந்துக்கோவில்களிலும் புத்தவிகாரங்களிலும் வளர்க்கப்பட்டு பூக்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அதனாலேயே இம்மரம் temple tree, pakoda tree என்றும் குறிப்பிடப்படுகிறது.


18. அனிச்சம்
 scarlet pimpernel (anagallis arvensis)மோப்பக்குழையும் அனிச்சம் என்கிறார் வள்ளுவர். அதாவது முகர்ந்து பார்த்தாலே வாடிவிடுமாம் அனிச்ச மலர். அது மட்டுமா? அனிச்சமலரைக் காட்டிலும் மென்மையானவள் என் காதலி, அனிச்சமலர் கூட என் காதலியின் பாதத்துக்கு நெருஞ்சிமுள் போல துன்பந்தரும் என்றெல்லாம் வர்ணிக்கிறார். அப்படிப்பட்ட அனிச்சமலரைக் காணும் பேறு கிட்டுமோ என்றிருந்த எனக்கு என் தோட்டத்துக் களைகளுக்கு மத்தியில் தானும் ஒரு களையாக வளர்ந்து மலர்ந்து அவை காட்சியளித்த அதிசயத்தை என்னவென்று சொல்வது? இங்கே பூவின் படத்தைப் பார்த்து பெரியதென கற்பனை செய்துவிடாதீர்கள். ஒரு எட்டுக்கல் மூக்குத்தி அளவிலான பூதான் இது.Scarlet pimpernel, blue scarlet pimpernel என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் இப்பூக்களின் சிறப்பு இவை சூரியன் இருக்கும்வரைதான் மலர்ந்திருக்கும். மழை வருமுன்னரோ.. சூரியன் மறையுமுன்னரோ.. சட்டென்று வாடி கண்களுக்குப் புலப்படாமல் மறைந்துவிடுவதால் இதற்கு ஏழையின் வானிலைமானி, இடையனின் கடிகாரம் என்றெலாம் பொருள்படும் poor man’s barometer, poor man’s weather-glass, shepherd’s clock என்ற செல்லப்பெயர்களும் உண்டு. ஆயுர்வேத மருத்துவத்தில் பாம்புக்கடி, நாய்க்கடி, தொழுநோய் போன்றவற்றுக்கான வெளித்தடவும் களிம்புகள் இத்தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பண்டைய கிரேக்கத்தில் மனப்பிறழ்வுக்கான மருந்தாகவும் இது பயன்படுத்தப்பட்டதாக அறியமுடிகிறது. ஒரு பக்கம் மூலிகையாக கருதப்படும் இது இன்னொரு பக்கம் களைப்பயிராகவும் அறியப்படுகிறது. இதன் கசப்பு காரணமாக ஆடுமாடுகள் இதை மேய்வதில்லை. தவறி தின்றுவிட்டால் இரைப்பை அழற்சி ஏற்பட்டுவிடும். இதன் விதைகளைத் தின்னும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறதாம்.

19. கருஞ்சீரகப்பூ
(Nigella sativa)கருப்பு என்று பொருள்படும் niger என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து நைஜெல்லா என்ற பெயர் இடப்பட்டுள்ளது. கருஞ்சீரகம், கலோஞ்சி, black seeds என்றெல்லாம் குறிப்பிடப்படும் நைஜெல்லாவின் தாயகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவாகும். இதன் அற்புதமான மருத்துவக்குணம் காரணமாக, கருஞ்சீரகம் இந்திய மற்றும் மத்தியக்கிழக்கு நாடுகளில் உணவில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. ஓமம் போல சுரீரென்று நாவில் உறைக்கும் தன்மை உடையது. ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளில் பெரும்பங்கு வகிக்கும் கருஞ்சீரகம் சகலரோக நிவாரணியாகக் கருதப்படுகிறது. சுமார் 3300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டைய எகிப்திய மக்களால் பயிரிடப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப்பூவின் மேல்பகுதியில் உருளையாகத் தோன்றும் காயிலிருந்து ஏராளமான விதைகள் கிடைக்கின்றன.

20. தூங்கு செம்பருத்தி
Japanese lantern  (hibiscus schizopetalus)ஒருவர் பாராசூட்டிலிருந்து இறங்குவது போன்ற அழகுடன் காற்றில் மிதந்தாடும் இந்த செம்பருத்தியின் தனித்துவ அழகுக்காகவே வீடுகளிலும் தோட்டங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. மெல்லிய காம்பின் இறுதியில் தலைகீழாய்த் தொங்கும் இதற்கு தூங்கு செம்பருத்தி என்று பெயர். ஆப்பிரிக்காவின் கென்யா, டான்சானியா, மொசாம்பிக் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இந்த தூங்கு செம்பருத்தி, தேன்சிட்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள் என அனைத்தையும் தோட்டத்துக்கு  கவர்ந்திழுக்கும் அழகுடையது. தூங்கு செம்பருத்தி என்ற பெயர் ஏன்? தூங்குதல் என்றால் தூய தமிழில் தொங்குதல் என்று பொருள். தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக்கண்டான் மரத்திலே என்ற பாடல் நினைவுக்கு வருகிறதா.. இப்படி தலைகீழாகத் தொங்குவதால் இதற்கு தூங்கு செம்பருத்தி என்று பெயர். எலும்புக்கூடு செம்பருத்தி (skeleton hibiscus), பவள செம்பருத்தி (coral hibiscus), சிலந்தி செம்பருத்தி (spider hibiscus), நார் செம்பருத்தி (fringed hibiscus), ஜப்பானிய லாந்தர் (japanese lantern) என ஏராளமான பெயர்கள் உள்ளன. கூடவே என் பிள்ளைகள் வைத்த செல்லப்பெயரான கிழிஞ்ச செம்பருத்தியையும் சேர்த்துக் கொள்ளலாம். :)))

**********

6 August 2017

காக்கைச் சிறகினிலே கீதமஞ்சரி

காக்கைச் சிறகினிலே - ஜூலை 2017-ல் கீதமஞ்சரி..
தரமானதொரு இலக்கிய இதழில் என் வலைத்தளத்துக்காக முழுமையாக எட்டுப் பக்கங்கள் என்பது எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி 2017-ல் மூன்றாம் பரிசு பெற்றமைக்காக பிரத்யேக அங்கீகாரம் இது. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி தேர்வுக்குழுவுக்கும் காக்கைச் சிறகினிலே ஆசிரியர் குழுமத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
இப்போட்டிக்கு கீதமஞ்சரி வலைப்பூவைப் பரிந்துரைத்த தோழி மணிமேகலாவுக்கு இதயபூர்வமான அன்பும் நன்றியும்.

19 July 2017

பூக்கள் அறிவோம் (1-10)

அழகழகானப் பூக்களைப் படமெடுத்துப் பகிர்வதோடு வேலை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பூக்களின் பெயர் மற்றும் பிற தகவல்களோடு பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று உரிமையோடு சில நட்புகள் கேட்டுக்கொண்டதன் பேரில் பூக்களைப் பற்றிய தேடுதலைத் துவக்கினேன். அது ஒரு பெரிய கடல். கரையில் நின்றுகொண்டு என்னிரு கைகளால் அள்ளியது கொஞ்சம்.. சிந்தியது போக சேமித்தது கொஞ்சமே கொஞ்சம். படிக்கும் காலத்தில் அத்தனை ஆர்வம் காட்டாத தாவர இயலில் எப்படி இப்படி உள்நுழைந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கிடக்கிறேன் என்பது எனக்கே வியப்பாக உள்ளது. கீதமஞ்சரியில் ஏற்கனவே பகிர்ந்த படங்களும் இத்தொகுப்பில் உள்ளன. எனினும் பூக்கள் குறித்த ஆர்வமுள்ளோர்க்கு பயனுள்ளதாகவும் என் வலைப்பூ சேமிப்பாகவும் இருக்கட்டும் என்பதற்காக தகவல்களோடு மீண்டும் பதிகிறேன்.  


1. தீக்குச்சிப் பூக்கள்

matchstick flowers (Aechmea gamosepala)பிங்க் நிறக்குச்சியின் தலைப்பக்கம் நீலவண்ண மருந்து பூசிய தீக்குச்சி மத்தாப்புகளை ஒரு கம்பியில் கோத்து அடுக்கினாற்போன்ற அழகு. அதனாலேயே இதற்கு தீக்குச்சி பூக்கள் (matchstick flowers) என்று பெயர். நுனியிலிருக்கும் நீலமொட்டுகள் விரியும்போது இன்னும் அழகு.  அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இவை ப்ரோமெலியாட் வகையைச் சேர்ந்தவை. ஒருமுறை ஊன்றிவிட்டால் போதும்.. அதன்பின் அதிக கவனிப்பு தேவைப்படாமல் வளரக்கூடியது. மேலும் இதன் ஓடுதண்டுகள் மூலம் தானே பதியன் போட்டு புதுச்செடிகளை உருவாக்கிக்கொள்ளும். பூக்கள் செடியில் மட்டுமல்லாது பூச்சாடி, பூங்கொத்து அலங்காரங்களிலும் வசீகரிக்கின்றன.

2. யூகலிப்டஸ் பூக்கள்

Red-flowering gum (Corymbia ficifolia)
சுமார் 700-க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் வகைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பான்மையானவை ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்டவை. மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுமார் 15 வகை மட்டுமே இந்தோனேஷியாவையும் பப்புவா நியூகினியையும் சேர்ந்தவை. குங்குமச்சிமிழ் போன்ற யூகலிப்டஸ் பூவின் மொட்டுகள் வளர்ந்து பூக்கும் சமயம் மூடி மட்டும் தானாகத் திறந்து கீழே விழுந்துவிடும். பிறகு பூ மலரும். கிரேக்க மொழியில் eu என்றால் நன்றாக என்றும் kalypto என்றால் மூடிய என்றும் பொருளாம். நன்கு மூடி போட்ட மொட்டுகளைக் கொண்டிருப்பதால் இதற்கு eucalyptus என்று பெயரானதாம். யூகலிப்டஸ் மரத்திலிருந்து கோந்து வெளிப்படுவதால் இதற்கு கோந்து மரம் (gum tree) என்ற செல்லப்பெயரும் உண்டு. வெள்ளை, பழுப்பு வெள்ளை, மஞ்சள், பிங்க், சிவப்பு வண்ணங்களில் பூக்கள் காணப்படும்.


3. கற்றாழைப்பூக்கள் 

(Aloe vera flowers)கற்றாழை (Aloe) குடும்பத்தில் சுமார் 400 வகைகள் உள்ளன. அவற்றுள் ஆலோவெரா (Aloe vera) எனப்படும் சோற்றுக்கற்றாழை அதிகளவில் மருத்துவகுணம் கொண்டது. பூச்சிக்கடி, தேமல், தோல்வறட்சி, அரிப்பு, தீக்காயம், பொடுகுத்தொல்லை, அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் புண்கள் இன்ன பிற சருமப் பிரச்சனைகளுக்கும், நீரிழிவு, மலச்சிக்கல், குடற்புண், தண்டுவடப் பிரச்சனைகள் போன்ற உடலின் உட்பிரச்சனைகளுக்கும் மருந்தாக, இன்னும் ஏராளமான நன்மைகளைக் கொண்டு சர்வரோக நிவாரணியாகப் பயன்படுகிறது. கற்றாழைகள் பூத்து நம்மில் பலரும் பார்த்ததில்லை. பொதுவாக சோற்றுக்கற்றாழைகள் நான்காம் வருடத்திலிருந்து பூக்க ஆரம்பிக்கும். நல்ல வளமான மண், காற்று, சூர்ய ஒளி இருந்தால் வருடத்துக்கு இரண்டுமுறை கூட பூக்கும். குழாய் வடிவப் பூக்களில் அலகை நுழைத்து தேனருந்தும் பறவைகள் முகம் முழுக்க மகரந்த மஞ்சள் பூசி வெளிவருவது பார்க்க வெகு அழகு.4. கங்காரு பாத மலர்கள் 

kangaroo paw flowers (Anigozanthos flavidus)பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பூக்கள் பார்ப்பதற்கு ரோமத்துடன் கங்காருவின் விரிந்த பாதவிரல்களைப் போன்று இருப்பதால் கங்காரு பாத மலர்கள் எனப்படுகின்றன. ஆஸ்திரேலியத் தாவரமான இவற்றின் பூக்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தாவரவியல் பெயரான Anigozanthos என்பதற்கு ஒழுங்கற்றப் பூக்கள் என்று பொருள். மொத்தம் உள்ள பதினோரு வகையில் இது yellow mist எனப்படும் மஞ்சள் பூ வகை. கொத்துக் கொத்தாய் மலர்ந்து நிற்கும். இவற்றின் தேனையருந்த போட்டிபோட்டு வரும் பறவைகள் மூலமே மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.5. அசுர லில்லி 

(Gymea Lily)நெருப்பு லில்லி, அசுர லில்லி, பெரிய ஈட்டிச்செடி என்றெல்லாம் குறிப்பிடப்படும் Gymea Lily - இன் தாவரவியல் பெயர் Doryanthes excelsa என்பதாம். Dory-anthes என்றால் கிரேக்கமொழியில் ஈட்டிப்பூ என்றும் excelsa என்றால் லத்தீன் மொழியில் அபூர்வமானது என்றும் பொருளாம். அண்ணாந்து பார்க்கவைக்கும் அபூர்வ செடிதான் இந்த அசுர லில்லி. 1மீ முதல் 2.5 மீ வரை நீளமுள்ள கத்தி போன்ற இலைகளுக்கு மத்தியில் கிட்டத்தட்ட 3 மீ. முதல் 8 மீ. உயரம் வரை வளரக்கூடிய தண்டின் உச்சியில் கொத்தாய் ரத்தச்சிவப்பில் பூப்பவை என்றால் அபூர்வமில்லையா? 70 செ.மீ. விட்டமுள்ள வட்டப்பூங்கொத்தில் சுமார் 150 பூக்கள் இருக்கலாம். அலங்காரப் பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் மலர்களிலேயே மிகப்பெரியது இந்த அசுர லில்லிதான் என்பது இதன் மற்றொரு சிறப்பு. பூக்கும் காலம் வருவதற்கு ஐந்து முதல் இருபது வருடங்கள் ஆகும். இதன் பூக்களிலிருந்து நறுமணத்தைலம் தயாரிக்கப்படுகிறது. பறவைகள் இப்பூவின் தேனையும் பூந்தாதையும் விரும்பியுண்கின்றன.


6. ப்ரோமெலியாட் பூக்கள் 

(Bromeliad flowers)ப்ரோமெலியாட் இனத்தில் அறியப்பட்ட வகை சுமார் 2700-க்கு மேல் இருக்கின்றன. நமக்கு நன்கறியப்பட்ட ப்ரோமெலியாட் வகை அன்னாசி. அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்றவற்றின் வெப்பமண்டலப் பிரதேசங்களைத் தாயகமாகக் கொண்டவை ப்ரோமெலியாட் தாவரங்கள். வீட்டின் உள்ளே வெளியே எங்குவேண்டுமானாலும் வளரக்கூடிய இவை இவற்றின் அழகுக்காக அனைவராலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. ப்ரோமெலியாட் பூக்களுக்கு பூக்கும் பருவம் என்று எதுவும் கிடையாது. நல்ல வளமான சூழல் இருந்தால் வருடத்தில் எந்த சமயத்திலும் பூக்கும். பூக்களும் மாதக்கணக்கில் வாடாமல் இருக்கும். சில ப்ரோமெலியாட் செடிகள் ஒருமுறை பூத்தபின் மடிந்துவிடும். அரிதான சில ப்ரோமெலியாட் வகை பூக்கும் பருவத்தை எட்டுவதற்கே எண்பது வருடங்கள் காத்திருக்கவேண்டுமாம்.   

7. ஐரிஸ் மலர்கள் 

(iris flowers)ஐரிஸ் என்றால் கிரேக்க மொழியில் வானவில் தேவதை என்று பொருளாம். வானவில் போல் அழகு மலர்களால் வசீகரிக்கும் இத்தாவரத்துக்கும் ஐரிஸ் என்ற பெயர் பொருத்தம்தானே. இவை லில்லி பூக்களைப் போலவே கிழங்கிலிருந்து வளர்ந்து பூக்கின்றன. இப்பூக்களிலிருந்து நறுமணத்தைலம் மற்றும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கனடா நாட்டின் க்யூபெக் மாநிலக்கொடியில் ஐரிஸ் மலர் இடம்பெற்றுள்ளது. க்ரோஷியா நாட்டின் தேசிய மலரும் இதுவே. 25வது திருமணக் கொண்டாட்டத்தின் அடையாள மலர் என்ற சிறப்பும் உடையது. இவற்றுள் சுமார் 300 வகைகள் காணப்படுகின்றன.


8. புட்டித்தூரிகைப் பூக்கள் 

callistemon flowersபுட்டிகளைக் கழுவ உதவும் ப்ரஷ்களைப் போலிருப்பதால் இந்த callistemon பூக்களுக்கு பாட்டில்பிரஷ் பூக்கள் (bottlebrush flowers) என்ற பெயர். ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட இவை பிறநாடுகளிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சுமார் 40 வகைகள் உள்ளன. பெரும்பாலானவை சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு பூக்களை உடையவை. பார்ப்பதற்கு ஒரே பூ போல இருந்தாலும் உற்றுக்கவனித்தால் தண்டைச் சுற்றி ஏராளமாக குட்டிக்குட்டிப் பூக்கள் இருப்பதைக் காணலாம். ஒரு மலர்த்தண்டு 30 செ.மீ முதல் 60 செ.மீ வரையிலும்கூட இருக்கும். காகிதப் பூக்களைப் போன்று வாசனையற்று இருந்தாலும் பளீர் வண்ணங்களால் பறவைகளை ஈர்த்து, தேனருந்த வரும் பறவைகள் மூலமாக மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகின்றன.


9. காற்று மலர்கள் 

wind flowers (anemone flowers)
நெடிய காம்புகளின் உச்சியில் மலர்ந்து காற்றாடும் இந்த அழகு மலர்களுக்கு Anemoi என்னும் கிரேக்கக் காற்றுக்கடவுளின் பெயரால் anemone எனப்பெயரிடப்பட்டுள்ளது. கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் ஒற்றையடுக்காகவோ.. இரட்டையடுக்காகவோ பல அடுக்குகளாகவோ மலர்ந்து தோட்டங்களுக்கு அழகுசேர்ப்பவை. வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் இதன் நறுமணம் முயல்களையும் மான்களையும் அருகில் நெருங்க விடுவதில்லையாம். மனிதர்களும் கூட இதனிடத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அதிகமாய் உரசி அன்புகாட்டினால் தோலில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படக்கூடும்.


10. மந்தாரை (அ) நீலத்திருவத்தி 

(bauhinia purpurea)மந்தார மலரே மந்தார மலரே.. நீராட்டு கழிஞ்ஞில்லே

பாடலில் காதலன் காதலியை உருவகப்படுத்தும் மந்தாரை மலர் இதுவாகத்தான் இருக்கவேண்டும் . ஆங்கிலத்தில் ஆர்கிட் மரம், தமிழில் மந்தாரை, நீலத்திருவத்தி, இந்தியில் தேவகாஞ்சன், ரக்தகாஞ்சன், தெலுங்கில் தேவகாஞ்சனமு, மலையாளத்தில் சுவனமந்தாரம்.. இப்படியான அழகழகு பெயரால் குறிப்பிடப்படும் இம்மரத்தின் பூவும் அழகுதான். சீனாவைத் தாயகமாகக் கொண்டதால் இதற்கு ஹாங்காங் ஆர்கிட் மரம் (Hong kong orchid tree) என்றும் இலைகள் ஒட்டகத்தின் குளம்பு போல பிளவுபட்டிருப்பதால் ஒட்டகத்தின் பாதம் (camel’s foot) என்றும் பூக்கள் விரிந்த சிறகுடைய பட்டாம்பூச்சி போல இருப்பதால் பட்டாம்பூச்சி மரம் (butterfly tree) என்றும் குறிப்பிடப்படுகிறது. பாஹினியா குடும்பத்தில் ஒரிஜினல், கலப்பு என்று சுமார் 500 வகைகள் உள்ளன.


10 July 2017

இரு துருவங்கள்

கதாசிரியன் ரமாகாந்த், அவன் மனைவி வத்ஸலா, நாடக நடிகை ஸூரங்கா, அவளது கணவன் கறுப்பன், ஓவியை ஸுலோசனா, அவள் தந்தையும் ஆலை முதலாளியுமான அண்ணா, காந்தியவாதியான பெரியவர் பாப்பா, இயந்திரம் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள வித்யாதரன், பேராசை பிடித்த காசி, அறியாமையிலும் வறுமையிலும் உழலும் காமாபூர் மக்கள்…. இவர்களைச் சுற்றி நகரும் கதையில் ஊர்த்திருவிழாவில் பலிகொடுப்பதற்காக வளர்க்கப்பட்டு மதமதத்துத் திரியும் எருமைக்கடாவும் ஒரு முக்கியப் பாத்திரம்.

\\எனக்கு ஒருநாள் சர்வாதிகாரம் கிடைத்தால் கிடைத்த க்ஷணமே உலகத்தில் குரூபிகளும் விகாரமான பொருட்களும் இல்லாமல் செய்திருப்பேன்\\ என்று எண்ணுமளவுக்கு கலையின் மீதும் அழகுணர்வின் மீதும் அடங்காத மோகமும் அழகற்றவை மீது விடாப்பிடியான வெறுப்பும் கொண்ட, உயர்குலத்தில் பிறந்த கதாசிரியன் ரமாகாந்த்…. தந்தையின் நன்றிக்கடன் பொருட்டு ரமாகாந்துக்கு மனைவியாக்கப்பட்டு கணவனால் உதாசீனப்படுத்தப்படுகிறாள் வத்ஸலா.. ஒரு கூலிக்காரியைப் போல இருக்கிறாய் என அவளுடைய கருப்பு நிறத்தைப் பழிக்கிறான் ரமாகாந்த். கலையுணர்வோ.. அழகோ.. அதிகப் படிப்போ.. அந்தஸ்தோஎதுவும் இல்லாத வத்ஸலாவை ஜடத்தினும் கீழாய் வெறுத்து ஒதுக்குகிறான். \\கந்தைப்புடைவையை உடுத்தி உன்னைப் பத்து குடியானவர் பெண்களின் நடுவில் நிற்கவைத்தால் பிரம்மதேவன் கூட உன்னைப் பிராம்மணப்பெண் என்று சொல்லமாட்டான்.\\ என்கிறான்.

அன்பால் கணவனின் மனத்தை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் காதலைப் பிச்சையாகக் கேட்கும் கழிவிரக்கம் மிக்கப் பெண்ணான வத்ஸலா, ஒரு கட்டத்தில் அவனுடைய ஆழ்மனத்தில் குடிகொண்டிருக்கும் அகங்கார சிந்தையைக் கண்டறிந்து அவனிடமிருந்து விலகி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். கணவனின் இழிபேச்சே அவளுக்குள் வாழ்வதற்கான உறுதியை உருவாக்குகிறது. எந்த கூலிவேலை செய்யும் பெண்களோடு ஒப்பிட்டு பேசினானோ.. அவர்களுடனேயே வாழ்கிறாள்.. அவர்களுக்காகவே வாழ்கிறாள்.. அவர்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணிக்கிறாள்.

வெளியுலகுக்கு வத்ஸலாவை சாகடித்துவிட்டு கிருஷ்ணாவாய் மாறுகிறாள். தன் கதையெழுதும் திறமையை வெளிப்படுத்துகிறாள்.. ரமாகாந்தின் கதைகளுக்கு மாற்றாய் அவள் எழுதியனுப்பும் கதைகள் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. அழகற்றவள் என்று ஒதுக்கப்பட்ட வத்ஸலாவுக்கும் ஒரு காதல் மலர்கிறது. எந்திரப் பொறியாளன் வித்யாதரன் அவளுடைய அன்பினாலும் பண்பினாலும் ஈர்க்கப்பட்டு மணஞ்செய்ய முன்வருகிறான். ஆனால் மறுபடியும் அந்த உயர்குல வகுப்புக்குள் ஒடுங்கி தன் சுயமிழக்க அவள் தயாராயில்லை.. அறியாமையில் உழலும் சேரி மக்களோடு மக்களாக தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வதே ஆனந்தம் என்கிறாள்.

இன்னொரு பக்கம் வத்ஸலாவைப் போலவே துளசிக்கும் மறு அவதாரம்குடிகாரக் கணவனால் கைவிடப்பட்டு அநாதையாகும் பட்டிக்காட்டுத் துளசியை, அவளது வறுமையை தன் இச்சைக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் முந்திரி ஆலை முதலாளி, அழகும் நல்ல குரல்வளமும் கொண்ட அவள், தவறிப்பிறந்த குழந்தைக்காக.. அதன் எதிர்காலத்துக்காக.. நாடக நடிகை ஸூரங்காவாக மாறுகிறாள்.. இந்த ஸூரங்காவின் முந்தைய வரலாறு தெரியாத வரையில் அவளோடு காதலாயிருக்கும் அழகின் உபாசகன் ரமாகாந்தின் மனம், உண்மை தெரியவந்தபின் விலகி ஸூலோசனாவிடம் தாவுகிறது. ரமாகாந்திடம் ஈர்ப்பிருந்தும் அவனது முந்தைய வரலாறு அறிந்த ஸுலோசனா அவனைத் தவிர்த்து வித்யாதரனை விரும்புகிறாள்.

நிறத்தை விடவும் மனத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வித்யாதரன் ஒரு இடத்தில் சொல்கிறான். \\ நிறத்துக்கு நான் அத்தனை மதிப்புக் கொடுப்பதில்லை. சுண்ணாம்பு நல்ல வெளுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் அதனால் அதற்கு கஸ்தூரியின் விலை வந்துவிடுமோ?\\

முடிவு என்னாயிற்று.. ரமாகாந்தின் வாழ்க்கையில் இறுதியாய் இணைந்தவர் யார்? வத்ஸலாவா? ஸூரங்காவா? ஸூலோசனாவா? இரு துருவங்கள் இணைந்தனவா? அல்லது வேறு வேறு திசை நோக்கி நகர்ந்தனவா? என்பதையெல்லாம் கதையை வாசிக்கும் விருப்புள்ளோர்க்காக விட்டுவைக்கிறேன்

இக்கதையின் மூலம் மராட்டிய மொழி என்பதால் அம்மொழியிலும் கலாச்சாரத்திலும் புழங்கும் சில பழக்க வழக்கங்களையும் ரசனையான உவமை மற்றும் சொலவடைகளையும் அறிந்துகொள்ளமுடிகிறது. உதாரணத்துக்குச் சில..

  • ·        உதட்டுச்சாயம் போய்விடும் என்று குழந்தையை முத்தமிடாத தாய்

  • ·        மஞ்சள் நிறமுள்ள இளம் வாழைப்பழங்களின் சீப்பு போல தோன்றிய அவளது மூடிய கை

  • ·        சந்திரனாகிய கூஜாவிலிருந்து பூமியில் ஊற்றப்பட்ட மயக்கந்தரும் மதுவென நிலவொளி

  • ·        பாற்கடலைக் கடைந்த காலத்தில் தேவாசுரர்கள் எவ்வளவு ஆவல் நிரம்பிய பார்வையோடு அமுதத்தைப் பார்த்திருப்பார்களோ, அதே பார்வையோடு கறுப்பன் தேநீர்க்கோப்பையைப் பார்க்கலானான்.

  • ·        எதிரே ஆகாயமும் கடலும் எது அதிக நீலமானது என்று பார்ப்பதற்காக ஒன்றோடொன்று கன்னங்களைப் பொருத்திவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தன.

  • ·        மத்தியான்னம் கடும்வெயிலினால் தகப்பன் போலத் தோன்றிய பகல் இப்போது தண்மையான தாத்தாவைப் போலத் தோற்றியது.

  • ·        அவன் காதலாகிய மதுவை கற்பனையான புட்டியில் நிரப்பி, அதிலிருந்து மாதப்பத்திரிகைகளாகிய கிண்ணங்களில் ஊற்றி வாசகர்களுக்குப் போதுமளவு கொடுத்துக் கொண்டிருந்தான்.


கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில் வைஎன்ற நம் பழமொழிக்கு நிகராகஎல்லாம் கிடக்க எருதுக்கு சீமந்தமாம்என்ற பழமொழி இடம்பெறுகிறது. தும்மினால் யாரோ நினைக்கிறார்கள் என்பது வள்ளுவர் கால வழக்கு. புரையேறினால் யாரோ நினைக்கிறார்கள் என்பது இக்காலத்திய வழக்கு. கொட்டாவி விட்டால் யாரோ நினைக்கிறார்கள் என்பது மராத்திய வழக்கு போலும்.

ஒருவருடைய கட்டுப்பாட்டில் இன்னொருவர் இருக்க நேர்ந்தால் பொதுவாக இவர் காது அவர் பிடியில் என்று சொல்வது நம் வழக்கம். இக்கதையில் பாப்பா என்னும் அஹிம்சாவாதியின் மூக்கு காந்திஜியின் பிடியில் என்று வருகிறது.

\\சிலர் பந்தயம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். காமாபூரைப் போன்ற இடத்தில் போலீஸாருக்குக் காபிச்செலவு கொடுத்துவிட்டால் ஜனங்கள் நடமாடும் நாற்சந்தியின் நடுவிலேயே உட்கார்ந்துகொண்டு எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம்.\\ இன்றளவும் மாற்றமில்லாத ஒரு சமூக அவலம் இது. இப்புதினம் எழுதப்பட்ட ஆண்டு 1934 என்பது இத்தருணத்தில் நினைவில் கொள்ளவேண்டியது.

மீன் சாம்பார், அரசிகர், பிச்சோடா போன்ற வார்த்தைகள் ரசிக்கவைக்கின்றன. மதுராவுக்குப் போன கண்ணன், மதுரைக்குப் போன கண்ணனானதும், ரமாகாந்த், வத்ஸலா, ஸுரங்கா, ஸூலோசனா, ஸோனு போன்ற மராத்திய பெயர்களுக்கு மத்தியில் கறுப்பன் இடம்பெற்றதும் கொஞ்சமே கொஞ்சம் நெருடல்.

மூல ஆசிரியர் - வி..காண்டேகர்
தமிழாக்கம்கா.ஸ்ரீ.ஸ்ரீ.
அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு
பக்கங்கள் 400
விலைரூ.125/-