28 October 2016

மடமயிலும் மதியறு மாந்தரும்


மப்பும் மந்தாரமுமாய் மழைமேகம்.. மயக்கும் காதலிணை அருகில்... ஆட்டத்துக்குக் கேட்கவேண்டுமாசட்டென்று தோகை விரித்து ஆடத்துவங்கிவிட்டார் அந்த ஆணழகன். அரைவட்டத் தோகையின் அத்தனைக் கண்களும்  என்னைப் பார் என் அழகைப் பார் என்று அழகு காட்டும்போது நமக்கே அவ்வளவு ஆசையாக இருக்கிறதே.. அந்தப் பெண்மயிலுக்கு ஆசை இல்லாமலா இருக்கும்.. அவளோ.. இதென்ன பிரமாதம்.. நான் பார்க்காத அழகனாஅவன் ஆடாத ஆட்டமா என்பது போல அலட்சியப் பார்வையோடு நின்றிருந்தாள். இவரோ அவ்வளவு பெரியத் தோகையை அநாயாசமாய்த் தூக்கிநிறுத்தி, தன் முன்னழகையும் பின்னழகையும் காட்டி, அவ்வப்போது இறகு சிலிர்ப்பி காவடியாட்டம் ஆடி, எங்கே அவள் பார்க்காமல் போய்விடுவாளோ என்று இஸ்.. இஸ்.. என்று இரைந்து.. அவளைக் கவர எப்படியெப்படியெல்லாமோ பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்..




அவளிடம் ஒரு சின்ன இணக்கம் கண்டுவிட்டால் போதும்.. காதல்மனத்தைக் கவர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு அவளைச் சுற்றிச்சுற்றி வந்து ஆடுவதும்.. இன்னுமாடீ உன் மனம் இரங்கவில்லை என்பதுபோல் இடையிடையே அகவிக் கேட்பதுமாகஅவரிருக்க... மிடுக்குடை மடமயிலோ.. செருக்குடை ஆட்டத்தையும் ஆளையும் ஓரக்கண்ணால் ரசித்தபடி மென்னடையில் மெத்தனம் காட்டி மேய்ந்துகொண்டிருந்தாள் அல்லது மேய்வதான பாவனையில் இருந்தாள். இவர் அவளை விடுவதாயில்லை.. அவள் இவருக்கு இடங்கொடுப்பதாயில்லை. இப்படியொரு ஊடல் நாடகம் அரங்கேறிக்கொண்டிருக்கும் வேளையில்தான் பூங்காவின் வாயிலில் வந்துநின்றது ஒரு சிற்றுந்து. அதிலிருந்து திபுதிபுவென்று இறங்கியது ஒரு மனிதமந்தை.. ஆம்.. மந்தைதான் அது.




ஆடும்மயிலின் அதிசயக்காட்சியைக் கண்டு ஓவென்று உச்சக்குரலில் ஆரவாரித்தது. பளீர் பளீரென்ற மின்னல்வெட்டுகளோடு படம்பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த ஆணழகன் அதற்கெல்லாம் அசரவில்லை.... ப்ளாஷ் வெளிச்சத்தில் ஆட்டம் சூடுபிடிக்க, ஒரு நடனத்தாரகை போல முன்னைவிடவும் நளினமாக ஆட ஆரம்பித்துவிட்டார். பெண்மயில்தான் மிரண்டுபோனாள். எட்ட நின்ற கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கிட்டவர ஆரம்பித்தது. அப்போதும் ஆட்டம் தொடரவே.. கூட்டத்துக்கு இப்போது குளிர்விட்டுப்போனது. செல்ஃபிக்கு அடிமையான அந்த மந்தை, வசீகரமற்ற பெண்மயிலை அங்கிருந்து விரட்டிவிட்டு அழகுமயிலோடு அளவிலாத செல்ஃபி எடுத்துத் தள்ளியது. இந்த ஆணழகனும் வந்த காரியத்தை மறந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். காதலிக்காக ஆடிய ஆட்டம் இப்போது தற்பெருமைக்காக என்றாகிப்போனது. வீண்பகட்டுக்கான சொல்லாடலான proud as a peacock என்பதன் முழுப்பதமும் உணர்ந்த தருணமது. சற்றுத் தொலைவில் மிரட்சி மாறாமல் மருளும் விழிகளோடு அக்காட்சியைப் பார்த்தபடி நின்றிருந்தாள் பெண்மயில்.




இப்படியாக அன்று எனது பறவை கூர்நோக்குந்தருணம் மனித மனங்களின் கூறுகண்டு நோகுந்தருணமாயிற்று. இயற்கை அம்சங்களின் இடைபுகுந்து இடையூறு செய்யும் மனிதமந்தை இருக்கும்வரை இதுபோன்ற அன்பின் பிறழ்வுகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும். இவ்வளவு சொல்கிறாயே.. நீ மட்டும் என்ன ஒழுங்கா.. நீயும்தானே மாய்ந்து மாய்ந்து பறவைகளைப் படம்பிடிக்கிறாய் என்று கேட்பீர்களாயின்.. நிச்சயம் அதற்கான பதில் என்னிடம் உண்டு. 




நான் ஒருபோதும் பறவைகளைத் தொந்தரவு செய்வதில்லை. அவற்றைப் படம்பிடிக்கையில் ஃப்ளாஷ் உபயோகித்ததே இல்லை. அருகில் சென்று அவற்றை அச்சுறுத்துவதில்லை. பெரும்பாலும் ஜூம் செய்துதான் படம்பிடிக்கிறேன். பறவைகளைப் படம்பிடிக்கச்செல்லும்போது அவற்றை மிரளச்செய்யும் பளீர் வண்ண உடைகளைத் தவிர்க்குமாறு ஒரு கட்டுரையில் வாசித்தது முதல் தவறாமல் அதைப் பின்பற்றுகிறேன்.





இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். இங்கே மஞ்சள்தாடை ஆட்காட்டிப் பறவைகள் அநேகம். அவை பெரும்பாலும் சாலையோரப் புல்வெளிகளிலும் விளையாட்டு மைதானங்களிலும்தான் முட்டையிடும். வெட்டவெளியில் கூடெதுவும் இல்லாது வெறுமனே முட்டையிட்டு அடைகாக்கும் காட்சி இங்கு சர்வசாதாரணமாகக் காணப்படும் காட்சி. இப்படி செய்வதால் இது ஒரு முட்டாள் பறவை ஒன்று ஒருசாராரும்.. மிகுந்த தன்னம்பிக்கை கொண்ட பறவை என்று இன்னொரு சாராரும் அடிக்கடி வாதத்தில் ஈடுபடுவதுண்டு. விஷயம் அதைப்பற்றியது அல்ல.. கால்பந்து மைதானத்தின் ஒருபக்கம் அடைகாத்துக்கொண்டிருந்த பறவையை வெகு தொலைவிலிருந்து படம்பிடித்து முன்பொருமுறை பதிவிட்டிருந்தேன். அதைப் பார்த்த பறவை ஆர்வல நண்பர் ஒருவர், இதுபோன்று பறவைகள் கூடுகட்டும், அடைகாக்கும், கூட்டில் குஞ்சுகள் இருக்கும் படங்களை இணையத்தில் பதிவிடவேண்டாமென்றும்.. பலருக்கும் நீங்கள் தவறான முன்னுதாரணமாகிவிடவேண்டாமென்றும் அறிவுறுத்தியமையால் அம்மாதிரியான படங்களையும் தவிர்த்துவருகிறேன். எனவே இப்பதிவை எழுதும் தகுதி எனக்கிருப்பதாகவே எண்ணுகிறேன்.  

&&&&&&

24 October 2016

வண்ணங்களாலொரு வடிகால்


வளர்ந்துவிட்டதால் மாத்திரமே குழந்தைப்பருவ சந்தோஷங்களைத் துறந்துவிடவேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்னவண்ணந்தீட்டும் புத்தகங்கள் குழந்தைகளுக்கானது என்ற நிலை மாறி பெரியவர்களுக்கும் இப்போது அறிமுகமாகியுள்ளன. மறுபடி குழந்தைப்பருவத்துக்கு அழைத்துச்செல்லும்குழந்தைகளைப் போலவே குதூகலிக்கவைக்கும்.. வண்ணந்தீட்டி மகிழ்வோமா நாமும்?


படம் 1

படம் 2

படம் 3



வண்ணந்தீட்டுவதால் மகிழ்ச்சி மட்டுமா கிடைக்கிறது? நம்மை நாமே அடையாளங்காண முடிகிறது. வருடக்கணக்காக மனத்தின் ஆழத்தில் அடைபட்டுக்கிடக்கும் நம் படைப்பாற்றலையும் கலையுணர்வையும் மெல்ல வெளிக்கொணரமுடிகிறது..


படம் 4

படம் 5

படம் 6


நோய், வலி, உளக்கவலைகளை மறக்கச்செய்கிறது.. மன அழுத்தம், படபடப்பு, மனச்சோர்வு, விரக்தி, தனிமை, எரிச்சல், கோபம், பசியின்மை, உறக்கமின்மை போன்ற பல உளப்பிரச்சனைகளுக்கும் தீர்வாக மருத்துவர்கள் சமீபகாலமாக நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் கலர் தெரபி சிகிச்சையில் வண்ணந்தீட்டும் புத்தகங்கள் சமீபகாலமாக முக்கிய இடம்பெற்றுள்ளன.


படம் 7

படம் 8

படம் 9



வண்ணங்கள் மனத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு மனதுக்குகந்த நிறங்களைத் தேர்ந்தெடுக்கையில் ஒரு உற்சாகப்பரவசம் உண்டாகிறது.. தீட்டி முடித்த வண்ணப்பக்கங்களைப் பார்க்கும்போதுஅட, நானா இவ்வளவு அழகாக வண்ணந்தீட்டியிருக்கிறேன், சபாஷ்என்று நமக்குள்ளே ஒரு பெருமிதம் மிளிரும்..



படம் 10


படம் 11

படம் 12


அடைப்பை விட்டு வெளியே வராமல் சிரத்தையோடும் கவனம் சிதறாமலும் வண்ணந்தீட்டும்போது நமக்கேற்படும் நிதானமும் பொறுமையும் ஆழ்நிலைதியானத்தைப் போல மனத்தை அமைதிப்படுத்தும். சிந்தனைகளை ஒருமுகப்படுத்தும். சுணக்கமான பொழுதொன்றில் என் அன்புத்தோழி மணிமேகலா எனக்குப் பரிசளித்த புத்தகத்தில் நான் தீட்டிய சில பக்கங்கள்தான் இவை... 


படம் 13

படம் 14

படம் 15


இதுபோன்ற புத்தகங்கள் ஸ்டேஷனரி கடைகளிலேயே கிடைக்கின்றன.. கிடைக்கவில்லையா.. கவலை எதற்கு.. நாமே நம் எண்ணம்போல் வடிவங்கள் வரைந்து வண்ணங்கள் தீட்டலாமேகற்பனை சிறகு விரிய வானமா தடைபோடப்போகிறது? நம் உள்ளே குமையும் உளைச்சல்களுக்கெல்லாம் எண்ணிலா வண்ணங்களால் வடிகால் அமைத்து எண்ணத்தில் மகிழ்வு கூட்டி இனிதாய் வாழ்வோமா இனி? 



17 October 2016

தான்தோன்றிப் பூக்கள்


வித்திடாமல்..
விதை தூவாமல்
நிலங்கொத்திவிடாமல்..
நீர்த்துளி வேண்டாமல்..
உரமேதும் கேளாமல்
உறுவேலி காவாமல்
களையெனவும் காட்டுத்தழையெனவும்
விளைந்தெங்கும் வளர்ந்து செழித்து
மண் மறைத்து மலர்ந்து சிரித்து
கண் நிறைக்கும் கவின்மலர்கள்




pic 1 - capeweed flowers




pic 2 - scarlet pimpernel flowers




pic 3 - bindweed flowers




pic 4 - wild mustard flowers 



pic 5 -sticky nightshade flowers




pic 6 - purple top flowers




pic 7 - ribwort plantain flowers




pic 8
paterson's curse flower (purple)
bird's foot flower (yellow)
common wireweed flower (pale yellow)
tick clover (pink)



pic 9 - some wild grass heads



pic 10
onion weed flower (top left)
black nightshade (top right -மணித்தக்காளிப்பூ)
whorled rosinweed flower (yellow)
scurvy weed flower (blue)

இணையத்தின் உதவியால் பூக்கள் மற்றும் செடிகளின் பெயர்களை ஓரளவு தேடிக்கண்டுபிடித்து எழுதியுள்ளேன். எவரேனும் எதுவேனும் தவறெனக் காணின் திருத்தக் கோருகிறேன். நன்றி.