16 June 2016

பூமராங்கும் டிஜிரிடூவும்



படம் 1


பூமராங் என்றதுமே பலருக்கும் ஆஸ்திரேலியாவின் நினைவு வந்துவிடும். ஆஸ்திரேலியாவின் கலாச்சார பாரம்பரிய அடையாளங்களுள் பூமராங்குக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. பண்டைக்காலத்தில் ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்கள் வேட்டையாடப் பயன்படுத்திய மரக்கருவிதான் பூமராங் (boomerang).  இன்று உலகமுழுவதும் பல நாடுகளில் விளையாட்டுப் பொருளாய்ப் பயன்படுத்தப்படும் பூமராங்கின் பிறப்பிடம் ஆஸ்திரேலியாதான் என்று நம்புவதற்கான ஆதாரங்கள் பலவும் கிடைத்துள்ளன.  ஆஸ்திரேலியாவின் மிகப் பழமைவாய்ந்த கிம்பர்லி பிரதேச பாறை ஓவியங்களில் கங்காரு போன்ற விலங்குகளை இந்த பூமராங் கொண்டு தாக்குவது போன்ற காட்சிகள் காணக்கிடைத்துள்ளன. அப்பாறை ஓவியங்களின் வயது இருபதாயிரம் வருடங்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.


படம் 2
கூட்டல் வடிவ பூமராங்

ஆதிகாலத்தில் விலங்குகளின் எலும்பால் தயாரிக்கப்பட்ட பூமராங்குகள், பிறகு மரத்தால் தயாரிக்கப்பட்டன. கருப்பு வாட்டில் மரம் மற்றும் குறிப்பிட்ட சில யூகலிப்டஸ் மரங்களின் நல்ல வைரம்பாய்ந்த மரங்களின் உறுதியான வேர்ப்பகுதிகள், பருத்த கிளைகள் அல்லது அடிமரத்தண்டுகள் போன்றவற்றிலிருந்துதான் பூர்வகுடிகளின் பாரம்பரிய பூமராங்குகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இன்று, பிளைவுட், பிளாஸ்டிக் போன்ற பொருட்களாலும் பூமராங்குகள் தயாரிக்கப்படுகின்றன. பூமராங்குகள் பல வடிவங்களில் பல அளவுகளில் காணப்படுகின்றன. பூமராங் என்றாலே எறிந்தவரிடம் திரும்பிவந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால் எல்லா பூமராங்குகளும் எறிந்தவரிடம் திரும்புவதில்லை.


படம் 3

பூர்வகுடி பூமராங்குகளில் மூன்று வகை உண்டு. கங்காரு போன்ற விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டது ஒரு வகை. இலக்கைத் தாக்குவது மட்டுமே அதன் வேலை. மிக லேசான வளைவுடனும் மழுங்கிய முனைகளுடனும் இருக்கும் அது எறிந்தவரிடம் திரும்பிவருவதில்லை. இரண்டாவது சற்று அதிகமாக வளைந்து ‘V’ வடிவத்தில் மழுங்கிய முனைகளுடன் இருக்கும். பூமராங் என்றதுமே நம் நினைவுக்கு வருவதும் இதுதான். இது இலக்கைத் தாக்கி எறிந்தவரிடமே திரும்பிவரக்கூடியது. இது பறவைகளைத் தாக்கப் பயன்பட்டது. மூன்றாவது கூட்டல் வடிவத்தில் இருக்கும். சிலவற்றின் முனைகள் மிகவும் கூராக இருக்கும். இது எதிரிகளைத் தாக்கப் பயன்பட்டது. பூர்வகுடியினர் பயன்படுத்திய பூமராங்குகளில் பூர்வகுடியினரின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. இன்று தயாரிக்கப்படும் நாகரிக மற்றும் அலங்கார பூமராங்குகளிலும் பூர்வகுடி ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டு அசலைப்போன்ற மாயையை உருவாக்கி விற்பனையில் சாதனை படைக்கின்றன.


படம் 4


ஆஸ்திரேலிய பூர்வகுடி கலாச்சாரத்தைப் பறைசாற்றும் மற்றொரு அடையாளம்  டிஜிரிடூ  (Didgeridoo) னப்படும் இசைக்கருவி. டிஜிரிடூ ஒரு காற்றூது கருவி. ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுடைய பாரம்பரிய இசைக்கருவி. கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளாக மக்களின் புழக்கத்தில் இவ்விசைக்கருவி இருப்பதோடு இன்று உலகின் பல நாடுகளிலும் அறிமுகமாகி இசைக்கப்படுகிறது என்பது வியப்பு. டிஜிரிடூவின் குறைந்தபட்ச நீளம் மூன்று அடி, அதிகபட்ச நீளம் பத்து அடி. பாரம்பரிய விழாக்களின்போது இசைக்கப்படும் இக்கருவியை பூர்வகுடியைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே இசைப்பது வழக்கம்.  இந்தக் கருவியைக் குறிப்பிடப் பயன்படும் didgeridoo என்ற வார்த்தையோ அதற்கு நிகரான வார்த்தையோ எந்த பூர்வகுடி மொழியிலும் கிடையாது என்பது வேடிக்கை. ஏனெனில் இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு வார்த்தை. பூர்வகுடி மொழிகளில் இதற்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. அவற்றுள் சில – mako, liddung, ngorla, morlo, wuyimbarl, ngunebobanja, mudburuja, morle, yirdaki, yigi yigi போன்றவை.


படம் 5
டிஜிரிடூவில் வாய்வைத்து ஊதும் பகுதி

யூகலிப்டஸ் மரத்தண்டிலிருந்தும் கிளைகளிலிருந்தும் இக்கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான மரத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு கலை. மரம் உயிரோடும் இருக்கவேண்டும் கரையான் அரித்து உள்ளே கூடாகவும் இருக்கவேண்டும். ஏன் கரையான் அரித்த மரமாக இருக்கவேண்டும்? கரையான்கள் அரித்திருப்பதால் உள்ளே ஏற்பட்டிருக்கும் காற்றறைகள்தாம் டிஜிரிடூவில் சரியான இசையை எழுப்ப உதவுகின்றன. அதனால் அப்படிப்பட்ட மரத்தைத் தேர்ந்தெடுத்து கூரான கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி, சரியான அளவுக்கு வெட்டி பட்டைகளை அகற்றி உள்ளே சுத்தம் செய்து உபயோகிக்கிறார்கள். டிஜிரிடூவின் மீது மிருகக்கொழுப்பு அல்லது எண்ணெய் தடவப்பட்டு நெருப்பில் வாட்டப்பட்டு மெருகேற்றப்படுகிறது. டிஜிரிடூவில் வாய் வைத்து ஊதும் பக்கம் உதடுகளில் உறுத்தாமல் இருக்கவும் ஊதும் காற்று வெளியேறாமல் இருக்கவும் தேன்மெழுகு தடவப்படுகிறது. டிஜிரிடூ நேராகவும் இருக்கலாம் கோணல்மாணலாக வளைந்தும் இருக்கலாம். எப்படி இருக்கிறதென்பது பிரச்சனையில்லை.. அதிலிருந்து வெளிப்படும் கணீரென்ற இசையே பிரதானம்.


படம் 6

உடல்சிலிர்க்க வைக்கும் டிஜிரிடூ இசையைக் கேட்க ஆவலா.. கீழிருக்கும் சுட்டிகளில் டிஜிரிடூ இசைக்கருவியின் செய்முறையையும், வாசிக்கும் விதத்தையும் பூர்வகுடியைச் சார்ந்த பிரபல டிஜிரிடூ இசைக்கலைஞர் டேவிட் ஹட்சன் விளக்குவதைப் பார்க்கமுடியும். தாங்கள் வாழும் சூழல் சார்ந்த பறவை விலங்குகளின் ஒலியை எவ்வளவு அழகாக இசைக்கிறார் இந்த இசைக்கருவியில்!



மற்ற காற்றூது கருவிகளை இசைப்பதற்கும் டிஜிரிடுவை இசைப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. நாதஸ்வரம் போன்ற இசைக்கருவிகளை இசைக்கும்போது ஊதுகுழல் ஊதுபவரின் வாய்க்குள் இருக்கும். புல்லாங்குழல் போன்றவற்றில் துளையின் மீது வாயை வைத்து ஊதுவர். ஆனால் இந்த டிஜிரிடுவை இசைக்கையில் வாய் முற்றிலுமாய் இசைக்கருவியின் ஊதுதுவாரத்துக்குள் இருக்கும். மூச்சினை உள்ளிழுத்து நிறுத்தி  ப்ப்ப்ர்ர்ர்ர்… என்று வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுடன் வெளியேற்றுவதன் மூலம் இசை வெளிப்படுகிறது.  

இக்காலத்தில் டிஜிரிடூக்களைத் தயாரிக்க கருவிகள் வந்துவிட்டன. அதோடு கரையான் அரித்த மரங்களின் அவசியமற்றுப்போய் அலுமினியம் போன்ற உலோகங்கள், யூகலிப்டஸ் அல்லாத வேறு மரங்கள், மூங்கில், ப்ளாஸ்டிக், மண் போன்ற பல்வேறு பொருட்களாலும் உலோகங்களாலும் டிஜிரிடூக்கள் தயாரிக்கப்படுகின்றன

வைரம்பாய்ந்த மரக்கட்டைகளிலிருந்து வேட்டைக்கான ஆயுதங்களையும் கரையான் அரித்த மரக்கட்டைகளிலிருந்து இசைக்கருவியையும் தயாரித்துப் பயன்படுத்திய பூர்வகுடி மக்களின் வாழ்வியல் ரசனை மிகவும் வியக்கவைக்கிறதல்லவா?

&&&&&

(படம் 4,6 தவிர ஏனையவை இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)