31 March 2016

வசவும் இசைவாய்...

முந்தைய தலைமுறைவரை பயன்பாட்டில் இருந்த உலக்கை இப்போது பரண்மேல் கவனிப்பாரற்றுக் கிடப்பதைப் பற்றிய கவிதையொன்றை முன்பு ஃபேஸ்புக்கில் வாசித்தேன். அதை வாசித்தபோது என் மனத்தில் தோன்றிய வரிகள். 


உலக்கைக்குமொரு காலம் 
உரியதாயிருந்தது அப்போது.
உடன் இன்னுஞ்சிலவற்றுக்கும்
உரியவரை வசைபாடும் உபயோகமிருந்தது
குதிர், குந்தாணி, குத்துக்கல், தீவட்டி,
குலங்கெடுக்க வந்த கோடரிக்காம்பு...
இப்படியும் இன்னபிறவுமாய்!
அர்த்தமுள்ள அத்தனையும் காலாவதியாகிவிட
கால்முளைத்தாடுகின்றன காதுகூசும் வசவுகள்!




"உலக்கை... உலக்கை... செக்குலக்கை... தண்ணி வழியிது, பார்த்துட்டு சும்மா நிக்கிறியே... குழாயை நிறுத்தினால் என்ன? ஒரு ஆள் சொல்லணுமா?"

"முண்டம்... அடுப்பில் எண்ணெய் வச்சிருக்கையில் ஈரக்கையை உதறுறியே அறிவில்லே?"

"குதிர் மாதிரி வளர்ந்திருக்கு, ஒரு வேலையும் செய்யத் துப்பு கிடையாது."

என்னுடைய பால்யத்தில் இவையெல்லாம் வசைச்சொற்கள் என்னுமளவில் மட்டுமே புரிதல் இருந்தது. இப்போது யோசிக்கையில் அவை ஒவ்வொன்றும் எவ்வளவு பொருள் பொதிந்தவை என்பது புரிகிறது. 

நம் வீட்டுப் பெரியோர்களாலும் முன்னோர்களாலும் உபயோகிக்கப்பட்ட அர்த்தமுள்ள சில வசைச்சொற்களும் இழிசொற்களும் இதை எழுதும் தருணத்தில் நினைவுக்கு வருகின்றன. நம்மில் பலரும் இவற்றை எங்கேயாவது எப்போதாவது  நிச்சயம் கேட்டிருப்போம். பொருள் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

உலக்கைதீவட்டிதண்டம், குத்துக்கல், பிடிச்சுவச்சப் பிள்ளையார் தானாக முன்வந்து எந்த வேலையும் செய்யாமல் அடுத்தவர் செய்வதை சும்மா வேடிக்கை பார்த்தபடி இருப்பவர்கள். 


குதிர்

குந்தாணி

குதிர், குந்தாணி, சோத்துப்பானைதின்று தின்று விட்டு எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்தால் உட்கார்ந்த இடம் என்று சோம்பி இருப்பவர்களுக்கு கிடைக்கும் பட்டங்கள்

குதிர்  என்பது நெல் கொட்டிவைக்கும் மரக்கலன்;

குந்தாணி என்பது நெல்லை உரலிலிட்டுக் குத்தும்போது வெளியே சிந்தாமல் இருக்க வாய்ப்புறத்தில் போடப்பட்டிருக்கும் கல் வளையம்

கோவில்மாடு - கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்ட காளைகள் தம்மிஷ்டத்துக்கு மேய்ந்தும் திரிந்தும் வாழ்வதுபோல் எந்தக் கவலையும் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தன் விருப்பத்துக்கு வாழ்பவர்கள். 

கோவில் பெருச்சாளி - பெரிய கோவில்களுள் வாழும் பெருச்சாளிகளுக்கு நைவேத்தியம், பிரசாதம், படையல், பக்தர்களின் வேண்டுதல் என்று எந்த வடிவிலாவது எப்படியாவது உணவோ, தானியமோ கிடைத்துக்கொண்டே இருக்கும். அவற்றைத் தின்று கொழுத்துவளரும் எலிகளைப் போல எந்த உடல் உழைப்பும் இல்லாமல் அடுத்தவர் உழைப்பில் உண்டு உடல் பெருக்கும் சோம்பேறிகளைக் குறிப்பது. 

பழம்பெருச்சாளி - அடுத்தவர் உழைப்பில் உடல் பெருக்கும் சோம்பேறிகளுள்ளும் பெரும் அனுபவசாலி, சுரண்டலில் கைதேர்ந்தவர். 

பழம்பஞ்சாங்கம் - பழைமைவாதத்தில் ஊறியவர்.

புண்ணாக்கு – எண்ணையெடுத்த பின்பு மீறும் சக்கையைப் போல் எந்த விஷயஞானமும் இல்லாதவர்கள்.

பன்னாடை – பனை மரம்தென்னை மரங்களில் கீற்றுகளைத் தாங்கிப்பிடிக்க அமைந்த இயற்கையின் சிறப்பு. பயனுள்ள இதை ஏன் பயனற்றவர்களுக்கான வசையாக உபயோகிக்கிறார்கள் என்று யோசிக்கையில்தான் விஷயம் பிடிபட்டது. இந்த பன்னாடை சல்லடை போன்றிருப்பதால் பழங்காலத்தில் எண்ணெய் வடிகட்டியாகப் பயன்பட்டது. சாரத்தை கீழே விட்டு தூசு தும்புகளைத் தக்க வைப்பது போல் பயனற்றவற்றை மனத்தில் தக்கவைக்கும் தன்மையினர்.

பன்னாடை

கூமுட்டை – கூழ்முட்டை – வெளியே நல்ல தோற்றமிருந்தாலும் உள்ளே விஷயஞானம் இல்லாதவர்கள்.

ஓட்டைவாய் - எந்த ரகசியத்தையும் தன்னகத்தே வைத்திருக்க இயலாதவர்.

குறுமுட்டு – அளவு கடந்த செருக்குடையவன் என்கிறது லெக்சிகன் தமிழகராதி

கருங்காலி, குலங்கெடுக்க வந்த கோடரிக்காம்பு - காட்டிக்கொடுப்பவர்கள், இனத்துரோகிகள்.. தன் குலத்தை (அ) குடும்பத்தைத் தானே கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள். (இரும்புக்கோடரிக்கு கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட உறுதியான கைப்பிடிதான் மற்ற கருங்காலி மரங்களை வெட்ட உதவி செய்கிறது என்பதால் இப்பட்டம்) 

விளக்கெண்ணெய் – வழவழா கொழகொழா என்று விஷயமில்லாமல் வெட்டிப்பேச்சு பேசுபவர்கள்.

வெண்ணெய்வெட்டி – மழுங்கலான கத்தியைக் கொண்டு வெண்ணெய் போன்ற மிக மென்மையான பொருளைத்தான் வெட்டமுடியும். செயலில் தீரம் காட்டாத வாய்ச்சொல் வீரர்களுக்குரிய பட்டம்.

உதவாக்கரை - மக்கள் புழங்குவதற்குப் பயன்படாத தன்மை கொண்ட ஆற்றங்கரை அல்லது குளத்தங்கரை போன்றவர்கள். இருந்தும் உபயோகமில்லாதவர்கள்.

களிமண் – தண்ணீரை உள்ளிழுக்கும் தன்மையற்றதால் செடி வளர உபயோகப்படாது. சொல்வதை உள்வாங்கும் திராணியற்றவர்களைக் குறிப்பது.

சென்னாக்குன்னி - சதா நச்சரிப்பவர்.

முண்டம் - தலையில்லாதவன். தலையிருந்தால்தானே அதில் மூளையும் இருக்கும்? எனவே மூளையில்லாதவன்.

மண்ணாந்தை, தெம்மாடிதத்திதறுதலை - சாதுர்யமில்லாதவர்கள்

அறிவுக்கொழுந்து - அவர்களுடைய அறிவு இப்போது கொழுந்தாக, இளந்தளிராக  இருக்கிறது. முற்றி வளர காலமெடுக்கும் அதாவது அவர்களிடத்தில் புரிதல் அரிதாம்.  

அகராதி - தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவப்பேச்சும் செய்கையும் கொண்டவர்கள்.

எச்சிற்கையால் காக்கை ஓட்டாதவன் - கஞ்சன், கருமி

கல்லுளி மங்கன், கல்லுப்பிள்ளையார் - அழுத்தக்காரன் (கல்லுளியால் செதுக்கினாலும் அசைந்துகொடுக்காத கல் போல எவ்வளவு தூண்டினாலும் உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தாது அழுத்தமாய் மறைத்துவைப்பவன்)

கிராமப்புறங்களில் அடுத்தவரை சாபமிடவென்று சில வசைச்சொற்களை உபயோகப்படுத்திக் கேட்டிருப்போம். கழிச்சலில் போக என்பார்கள். அந்தக்காலத்தில் காலரா வந்து வாந்தி பேதியால் இறந்தவர்கள் அதிகம். அப்படி பேதி வரவேண்டும் என்ற சாபம்தான் அது. காளியாய் கொண்டு போக என்றால் அம்மை வரவேண்டும் என்ற சாபம். இப்போது காலரா, அம்மை போன்றவற்றுக்கு தடுப்பூசிகள் வந்துவிட்டதால் அந்த சாபங்கள் பலிப்பதற்கான சாத்தியங்கள் குறைவே.

இவை போக சிடுமூஞ்சி, அழுமூஞ்சி, உம்மணாமூஞ்சி, அழுகுணி, புளுகுணி, மடையன், கிறுக்கன், கேணன், வம்பன், மூர்க்கன், வாயாடி, அடங்காப் பிடாரி, சண்டி, விடாக்கொண்டன், கொடாக்கொண்டன், அழுக்குப்பாண்டை, பயந்தாங்கொள்ளி, தொடைநடுங்கி, மேனாமினுக்கி, கோள்மூட்டி போன்ற காரணப்பெயர் வசவுகளுக்கு விளக்கம் தேவைப்படாது அல்லவா?

யாவும் எவ்வளவு அர்த்தமுள்ள வசவுகள்.. இன்னும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு வார்த்தைகள் புழக்கத்தில் இருந்திருக்கலாம், இப்போதும் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவரைக்கும்தான் குறிப்பிட்டிருக்கிறேன். 

இவை தவிரவும் குரங்கு, கோட்டான், எருமைபன்றிநாய்பேய் போன்று கோபமாகவும், செல்லமாகவும் வெளிப்படும் விசேட வசைச்சொற்களை நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறோம் அல்லவா? 

(படங்கள் உதவி: இணையம்)

26 March 2016

பறவைகள் பலவிதம் 6

பறவைகள் பலவிதம் தொகுப்பில் இந்தமுறை நம் ரசனைக்கு உலா வருகின்றன ஆஸ்திரேலியாவின் சொந்தப்பறவைகள் அல்லாத அந்நிய நாட்டுப் பறவைகள் சில.. அழகுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பறவைகளுள் ஒன்று நம் தேசியப் பறவையான மயில். இங்கு பல பூங்காக்களில் சுதந்திரமாக உலவும் அவற்றின் அழகும் நடையும் அகவலோசையும்  மனத்துக்குள் புதியதொரு உற்சாகத்தை உருவாக்குவது உண்மை. 


ஆண்மயில் (peacock)

ஆண்மயில் ஆட்டம் (peacock fanning)

இள ஆண்மயில் (peacock juvenile)

முளைச்சு மூணு இலை விடல..அதற்குள் இந்த ஆட்டமா என்பார்கள். அதுபோலத்தான் இருந்தது இந்த விடலை மயிலின் ஆட்டமும்.. இன்னமும் கண்கள் உருவாகாத தன் தோகையை அழகாய் விரித்து அதுவும் ஆடியது அழகுக்காட்சி. 


விடலை ஆட்டம்  (peacock juvenile fanning)

ஆண்மயில்கள் தோகை விரித்தாடும் என்பதை அறிவோம். பெண்ணும் தன் சின்னஞ்சிறிய தோகையை விரித்தாடுவதை இங்குதான் கண்டேன். ஆணுக்குத் தானும் இளைப்பில்லை என்று காட்டவோ இந்த உற்சாக ஆட்டம். 


பெண்மயில் ஆட்டம் (peahen fanning)

பெண்மயில் (peahen)

ஐரோப்பியர்கள் தங்கள் உணவுத்தேவைக்கென அறிமுகப்படுத்தியவை வளர்ப்புப் பறவைகளான கோழி, வாத்து, பெருவாத்து போன்றவை.. 
இன்றும் ஆஸ்திரேலிய மக்களின் இறைச்சிப் பயன்பாட்டில் 50% -ஐ ஆக்கிரமிப்பது கோழி, வாத்து இறைச்சிகளே.  


வளர்ப்பு சேவல் (domestic fowl)

வளர்ப்பு சேவல் (domestic fowl)

பெருவாத்து (pilgrim goose)

பெருவாத்து (pilgrim goose)

மஸ்கோவி வாத்து ஆண் (muscovy duck)


மஸ்கோவி  இளம் வாத்துகள் (muscovy ducks juvenile)

தேவைக்கென அறிமுகப்படுத்தப்பட்ட பறவைகளுள் சில இன்று ஆஸ்திரேலியாவின் தலைவலியாய் இருப்பதை ஒண்டவந்த பிடாரிகள் தொடரில் பார்த்தோம். அவற்றுள் முக்கியமானது முட்டைக்கோஸ் தோட்டத்தில் புகுந்து விளையாடும் புழுக்களை அழிப்பதற்கெனக் கொண்டுவரப்பட்ட மைனா. மைனாவை உள்ளூர் மக்கள் எதிரியாகப் பார்த்தாலும் , சின்ன வயதிலிருந்து அவற்றோடு வளர்ந்ததாலோ என்னவோ  மைனா, மாடப்புறா, மணிப்புறா போன்ற பறவைகளைப் பார்க்கும்போது ஊர்ப்பாசம் இயல்பாகவே வந்துவிடுகிறது


மைனா (Indian myna)

சற்றே வித்தியாசமான மைனா.. வயது முதிர்ந்ததாக இருக்கலாம். (Indian myna)


ஐரோப்பியக் கருங்குருவி (common european starling)

மாடப்புறா (rock dove)

பறவைகள் என்றாலே  மகிழ்ச்சிதான்.. பறவை பார்த்தலின் சுகமும் சுவாரசியமும் அறிந்தவர்களுக்கு சோறு, தண்ணீர் கூட தேவைப்படாது. பறவைகளைப் போல சிறகுவிரித்துப்பறக்க ஏங்கும் மனத்தின் முன் சொந்தப்பறவையென்ன அந்நியப்பறவையென்ன? அனைத்துமே அற்புதம்தான். அல்லவா?

23 March 2016

கரப்பான்பூச்சிப் பந்தயம்


குதிரைப் பந்தயம் தெரியும். நாய்ப் பந்தயம், ஒட்டகப் பந்தயம் ஏன் நெருப்புக்கோழிப் பந்தயம் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். இதென்ன கரப்பான்பூச்சிப் பந்தயம்? அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவில் இதற்கும் இடமுண்டு. வருடாவருடம் ஆஸ்திரேலியாவின் தேசியத்திருநாள் ஒன்றில் நடைபெறும் ஒரு விறுவிறுப்பான கொண்டாட்டம்தான் இந்த கரப்பான்பூச்சிப் பந்தயம்.

(முன்குறிப்பு - கரப்பான்பூச்சி என்ற பெயரைக் கேட்டாலே ஒவ்வாதவர்கள் இப்பதிவைத் தவிர்க்கவும்.  ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து வாசிக்கலாம். :))))




சுமார் நான்கு மீட்டர் விட்டம் கொண்ட வட்டத்தளம்தான் பந்தயக்களம். போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு கரப்பான்பூச்சியின் முதுகிலும் அடையாள எண் குறியிடப்படும். போட்டி நடத்துவதிலேயே அதுதான் மிகவும் கடினமான வேலை என்கிறது போட்டியை நடத்தும் நிறுவனம். அடையாள எண்ணிடப்பட்ட கரப்பான்பூச்சிகளை ஒரு பெரிய கண்ணாடிக்குவளையில் போட்டு எடுத்துவந்து களத்தின் மையத்தில் கவிழ்ப்பார்கள். கரப்பான்பூச்சிகள் எந்தத் திசையிலும் ஓடலாம். வட்டத்தின் சுற்றெல்லையை எது முதலில் தொடுகிறதோ அதுவே வெற்றி பெற்ற கரப்பான்பூச்சியாக அறிவிக்கப்படும். இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பாளர்கள் முதல் மூன்று கரப்பான்பூச்சிகளைப் பிடித்து வெற்றியை உறுதிசெய்வார்கள். 

இப்போட்டியானது ஜனவரி 26ஆம் நாள் Australia Day எனப்படும் ஆஸ்திரேலியா தினக்  கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் பாரம்பரிய விளையாட்டாகவும் நடத்தப்படுகிறது.  இந்தப் பந்தயம் மூலம் கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி சமூக நல மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. 




அதென்ன ஆஸ்திரேலியா தினம்? முதன்முதலாக ஐரோப்பியர் ஆஸ்திரேலிய மண்ணில் அதிகாரபூர்வமாகக் குடியேறிய தினம்தான் அது. பதினொரு கப்பல்களில் சுமார் 1000 கைதிகளையும் அதிகாரிகளையும் பிற தொழிலாளர்களையும் அவர்களுக்குத் தேவையான சாமான்களையும் ஏற்றிக்கொண்டு ஐரோப்பாவிலிருந்து புறப்பட்ட  முதல் கப்பல் தொகுதி 1788ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றுதான் ஆஸ்திரேலியாவை வந்தடைந்தது. அந்த நாளின் நினைவைக் கொண்டாடும்  வகையில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் அரசு விடுமுறையோடு ஆஸ்திரேலியா தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

சரி, இப்போது கரப்பான்பூச்சிப் பந்தயத்தின் வரலாற்றுக்கு வருவோம்.. கரப்பான்பூச்சிக்குப் பெரிய வரலாறு இருந்தாலும் கரப்பான்பூச்சிப் பந்தயத்துக்கு அப்படியொன்றும் பெரிய வரலாறு இல்லை..

1982 ஆம் வருடம். பிரிஸ்பேன் நகரத்தில் ஸ்டோரி ப்ரிட்ஜ் ஹோட்டலில் மதுவருந்தும் அறை. இரு சூதாடிகளுக்கிடையே சூடாக ஒரு வாக்குவாதம். விஷயம் வேறொன்றுமில்லை.. யாருடைய ஊர் சிறந்த ஊர் என்பதுதான் பிரச்சனை. ஒருவன் சொல்கிறான்

எங்க ஊர்தான் உங்க ஊரை விடப் பெரியது. எங்கள் மக்கள்தான் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள்.

சும்மா சொல்லிக்கொண்டே இருக்காதே.. நிரூபி

நிரூபிக்க என்ன இருக்கிறது? அதுதான் உண்மை.  எல்லாவற்றிலும் நாங்கள்தான் சிறந்தவர்கள். உங்கள் ஊர் கரப்பான் பூச்சி கூட எங்கள் ஊர் கரப்பான்பூச்சிக்கு முன்னால் நிற்கமுடியாது.  தெரியுமா?”  

அப்படியா சொல்றே? பந்தயம் வைத்துப் பார்க்கலாமா?”

உனக்கும் எனக்குமா?”

இல்லை இல்லை உங்க ஊர்க் கரப்பான்பூச்சிக்கும் எங்க ஊர்க் கரப்பான்பூச்சிக்கும்

வைத்துக்கொள்வோமே.. எங்கே? எப்போது?”

நாளை இதே நேரம் இதே இடம். நீ உன்  ஊர்க் கரப்பான்பூச்சியைக் கொண்டுவா.. நான் என் ஊர்க் கரப்பான்பூச்சியைக் கொண்டுவரேன். ஒரு கை பார்த்திடலாம்.

இப்படிதான் இரு குடிகாரர்களுக்கிடையே ஆரம்பித்தது அன்றைய கரப்பான்பூச்சிப் பந்தயம். கிட்டத்தட்ட 35 வருடங்களாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊர்களுக்கிடையில் ஆரம்பித்தப் போட்டி இப்போது தனிநபர்களுக்கிடையிலானப் போட்டியாகிவிட்டது. பந்தயத்துக்கான ஒழுங்கும் விதிமுறைகளும் வகுக்கப்பட்டுஅதே ஹோட்டலில் இப்பந்தயமானது தங்கக்கோப்பைக்கான பந்தயமாக  மிக விமரிசையாக  விழா போல  ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.  அது மட்டுமா? ஆஸ்திரேலியாவின் இந்த கரப்பான்பூச்சி பந்தயம் அமெரிக்காவில் பல சூதாட்டவிடுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு பெருமளவில் பணயப்பணம் விளையாடும் களமாகவும் திகழ்கிறது.




ஆஸ்திரேலியா தினத்தன்று ஸ்டோரி ப்ரிட்ஜ் ஹோட்டல் வளாகம் காலையிலிருந்தே களைகட்ட ஆரம்பித்துவிடும். பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் குடியும் கும்மாளமுமாக குழுமிவிடுவார்கள். காலை பதினொரு மணியளவில் ஆரம்பித்து மாலை வரை பதினான்கு பந்தயங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். பந்தயங்களில் பங்கேற்கும் கரப்பான்பூச்சிகளின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டுமாம்.

ஒரு கரப்பான்பூச்சி ஒரு பந்தயத்தில் மட்டும்தான் கலந்துகொள்ளவேண்டும். அதில் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியுற்றாலும் சரி, வெளியேறிவிடவேண்டும். அடுத்தடுத்தப் பந்தயங்களில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது. பந்தயத்தில் கலந்துகொள்ளும் கரப்பான்பூச்சி ஊர்ந்தோடிதான் எல்லைக்கோட்டை அடையவேண்டும். பறந்துபோய் எல்லையைத் தொடுவது போட்டிவிதிகளுக்குப் புறம்பாகும். பந்தய விதிமுறைகளைப் பின்பற்றாமல் பறக்கும் முயற்சியில் ஈடுபடும் கரப்பான்பூச்சிகள் போட்டியிலிருந்து விலக்கப்படும். 

தங்கள் வீட்டுக் கரப்பான்பூச்சிகளின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்கள் அவற்றையே போட்டிக்குக் கொண்டுவரலாம். அப்படி நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது கரப்பான்பூச்சி கிடைக்காதவர்கள் போட்டியை நடத்தும் நிறுவனத்திடமிருந்து கரப்பான்பூச்சிகளை விலைகொடுத்து வாங்கலாம். பந்தயத்துக்காகவே உருவாக்கப்பட்டு வளர்க்கப்படும் திறமைவாய்ந்த கரப்பான்பூச்சிகளும் விற்பனைக்கு உண்டு. ஒரு கரப்பான்பூச்சியின் விலை அதிகமில்லை ஜென்டில்மென் ஐந்தே ஐந்து டாலர்கள்தான். போட்டியில் கலந்துகொள்ள கட்டணம் ஒரு ஐந்து டாலர்கள்.. மொத்தமாய் பத்து டாலர்கள் செலவழித்தால் போதும்.. நம்மூர் மதிப்பில் கணக்குப் போட்டால் சுமார் ஐநூறு ரூபாய்தான்.

பந்தயத்தின்போது வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் மேடையிலிருந்து புறப்பட்டு பார்வையாளர்களை நோக்கிப் பாயும் கரப்பான்பூச்சிகளைக் கண்டு வீறிட்டு அலறிக் குதூகலித்துக் கொண்டாடுகிறது கூட்டம். வெற்றி பெற்ற கரப்பான்பூச்சி(யாளரு)க்கு முதல் பரிசாக வெற்றிக்கோப்பையும் 200 டாலருக்கான வவுச்சரும்! இரண்டாம் பரிசாக 25 டாலர்கள்! மூன்றாம் பரிசு 15 டாலர்கள்! 

கரப்பான்பூச்சிகளுக்கு மக்கள் வைக்கும் சில விசித்திரப் பெயர்கள் நகைப்பை வரவழைக்கும். இதுவரையிலான பந்தயங்களில் வெற்றிக்கோப்பையை வென்ற சில கரப்பான்பூச்சிகளின் வேடிக்கையான பெயர்கள்  Alfred Hitchcocky (2013), Lord of the Drains (2003), www.hardcocky.com (2000), Drain Lover (1992), Desert Storm (1991), Millenium Bug (1999),    Captain Cockroach (1988), Not A Problem (1984).




இந்தக் கொண்டாட்டத்தின் இன்னொரு அம்சமாக அழகிப்போட்டியும் நடைபெறுவதுண்டு. வெற்றி பெற்ற அழகிக்கு miss cocky என்ற பட்டம் சூட்டப்பட்டு பரிசளிக்கப்படும். ஒரு வருடத்துக்கு இப்போட்டிக்கான அதிகாரபூர்வப் பிரதிநிதியாக அவர் செயல்படுவார்.

சரி, பந்தயம் முடிந்தபின் அவ்வளவு கரப்பான்பூச்சிகளும் எங்கே போகும்? வேறெங்கு? நேராக பரலோகப் பயணம்தான். பந்தயம் முடிந்த கையோடு எல்லா இடங்களிலும் பூச்சிமருந்து அடிக்கப்பட்டுவிடும். இண்டு இடுக்கில் ஒளிந்திருப்பவற்றையும் மருந்தின் வீரியம் மரணிக்கச்செய்துவிடும். இந்த சம்பவத்துக்கு வெற்றிபெற்ற கரப்பான்பூச்சியும் விதிவிலக்கல்ல என்பதுதான் உச்சபட்ச வேடிக்கை.

&&&
(படங்கள் உதவி - இணையம்)


19 March 2016

கூழாங்கற்கள் என் பார்வையில்...





ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து திருச்சி சென்று அங்கிருந்து பாண்டிச்சேரி, பிறகு சென்னை, சிங்கப்பூர் வழியாக சிட்னியை அடைந்து இறுதியாக இப்போது என் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கிறது கனவுப்ரியனின் கூழாங்கற்கள். நட்பின் வரிசையில் நானும். மிகவும் நன்றி இரத்தினவேல் ஐயா.. நன்றி கனவுப்ரியன்.

ஒரு புத்தகத்தின் உள்ளார்ந்த சாரத்தை வாசிக்குமுன் அந்நூலுக்கான அணிந்துரை, வாழ்த்துரைகளின் பக்கம் செல்வதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். வாசிக்கக்கூடாது என்றில்லை.. மற்றவர்களின் கருத்தோட்டம் நம்முடைய கண்ணோட்டத்தைப் பாதித்துவிடக்கூடும் என்ற பயமே காரணம். ஆனால் என்னுரை என்னும் எழுத்தாளரின் தன்னுரை விலக்கு. கூழாங்கற்களில் கனவு ப்ரியனின் தன்னுரையே ஒரு சிறுகதையென எடுத்தவுடனேயே மனம் நெகிழ்விப்பது சிறப்பு. தகப்பன்சாமிகளை வாழும் காலத்தில் கொண்டாடாது தவிர்த்த, அல்லது ஆராதிக்கத் தெரியாத அத்தனை உள்ளங்களையும் ஏங்கச்செய்யும் அற்புதமான உரை.

கனவு ப்ரியனின் கதைகளில் மனம் பாதிக்கும் ஒரு பொதுவான விஷயம், பணிநிமித்தம் தத்தம் சொந்த மண்ணையும், உறவுகளையும் விட்டுப்பிரிந்து அயல்மண்ணில் வாழவேண்டிய சூழலில் சிக்கியிருக்கும் மனிதர்களின் மனப்போக்கு. சின்னதாகவோ.. பெரியதாகவோ.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலட்சியம்.. அதை அடையவேண்டி அவர்கள் ஓடும் ஓட்டம்.. குறுக்கிடும் இன்னல்கள்தாண்டும் தடைகள்.. சிலருக்கு அவர் லட்சியத்தை அடையுமுன்னரே வாழ்க்கை முடிந்துபோய்விடுகிறது. சிலருக்கோ லட்சியம் தன் உருவை மாற்றிக்கொண்டே இருக்கிறதுவாழ்க்கை இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது.. இன்னும் சிலருக்கோ லட்சியம் எது என்பதே உருத்தெரியாமல்.. கண்டறிய இயலாத லட்சியத்தை காணாப்பெருவெளியில் கண்டறிவதே லட்சியமாய்எத்தனை விதமான கதாமாந்தர்களை நம் கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறார்

வீடு துறந்தவன், ஊரைத் துறந்தவன், நாடு துறந்தவன், நல்வாழ்க்கை துறந்தவன், உறவு துறந்தவன், உண்மை துறந்தவன், மகிழ்வைத் துறந்தவன், மானத்தைத் துறந்தவன் என்று துறவு சூழ் உலகின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கதைக்குள் தன்னிலையாகவோ, படர்க்கையாகவோ நமக்கு புத்தகம் முழுக்கப் பரிச்சயப்படுத்தியபடியே இருக்கிறார். ஆச்சர்யப்படத்தக்க விதமாய் எந்தச் சிறுகதையுமே அவலச்சுவையூட்டுவதாய் இல்லாது, நிர்பந்திக்கப்பட்ட வாழ்வை நெஞ்சத் துணிவுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதாகவே அமைந்திருப்பது சிறப்பு. ஜைனப் அல் பாக்கர், பிலிப்பைனி பெண் ஜூவானா, சமீமா, வித்யா விஜயராகவன் போன்ற தன்னம்பிக்கைப் பெண்களை வாசிக்கையில் மனம் நிறைவது உண்மை.

முதல் கதையாக இந்த மடம் இல்லைன்னா சந்த மடம்ஐயப்பன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட கையோடே, கதைத் தலைப்பு நினைவுக்கு வந்து முடிவை யூகிக்க வைத்துவிடுகிறது. ஐயப்பன் போன்ற தன்னலமற்ற, வீரியமிகு குணாதிசய மாந்தர்களை ஒரு இடத்தில் கட்டிப்போட்டு வைப்பது என்பது வெள்ளத்தை அணைபோட்டுத் தடுத்துவைப்பதைப் போன்றதுதான். நாம் வழியுண்டாக்கித் தரவில்லையெனில் என்றாவது ஒருநாள் அதுவே கரையுடைத்துத் தனக்கானப் பாதையில் பயணப்பட்டுவிடும்.

கூழாங்கற்கள் கதையில் ஒரு வெளிநாடு வாழ் தகப்பனின் பிரிவுத்தவிப்பும், பணியிடத்தில் உண்டாகும் சிக்கல்களை ஆற்ற வழியில்லாத வெறுமையும் தனிமையும் மிக அழகாகக் காட்டப்படுகிறது. இறுதிவரை படபடப்போடு வாசிக்கவைத்த கதை. சுபமாய் முடித்ததில் திருப்தி.

களிமண் வீடு கட்டிய அனுபவத்தை நகைச்சுவையோடு சொல்லியிருப்பது நல்ல ரசனை. இறுதிவரை ஏதோவொரு எதிர்பாராத் திருப்பத்தை எதிர்பார்த்தே கதையை நகர்த்திய மனத்துக்கு இறுதியில் நானே ஒரு குட்டுவைத்தேன். நெகிழவைத்தக் கதை குண்டு பாகிஸ்தானி. உருவு கண்டு குறள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வடிவு போன்ற கதாமாந்தர்களை நாமும் நம் வாழ்க்கையில் சில தருணங்களில் எதிர்கொண்டதுண்டு. ஆடுகள் மீது கொண்ட பற்றும் பாசமும் ஆட்களை விட்டு அவளை விலகச்செய்து ஒரு மனநோயாளியாகவும் மாற்றியிருக்கிறதென்றால் அந்த ஆடுகள் அவள் பிரிவை எண்ணிக் கண்ணீர் விடுவதில் ஆச்சர்யம் என்ன?

மேட் இன் சைனா கதையில் வரும் கல்லூரி கால ப்ராஜக்ட் அனுபவம் அப்படியே என்னுடைய பாலிடெக்னிக் ப்ராஜெக்ட் அனுபவத்தைக் கிண்டிக்கிளறி வெளிக்கொணர்ந்து பழையநினைவுகளில் மூழ்கடித்துவிட்டது. நெற்றித்தழும்புக்குப் பின்னாலிருக்கும் கதை சுவாரசியம். வானமும் கடலும் பயணிக்கதான் லாயக்கு. மற்றபடி தரைதான் எப்போதும் சுகம் என்ற வரிகள் ஆழமாய் மனம் தைக்கும் உண்மை!

வரப்போகும் ஒரு பேரிழப்பைத் தடுக்க ஒரு தட்டானால் முடியக்கூடுமானால் இயற்கையின் சின்னச் சின்ன சமிக்ஞைகளும் நமக்குக் கற்றுத்தரும் பாடம் எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை உப்புக்காற்று கதை மூலம் உணர்த்தியிருப்பது சிறப்பு. இனி ஒரு விதி செய்வோம் கதையை, இயற்கையின் மாபெரும் மருத்துவப் பெட்டகம் குறித்த நம் அறியாமையைத் தட்டியெழுப்பும் ஒரு கதையாகப் படைத்துள்ளது அருமை. அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வழி குறித்த நெருடல் ஒரு பக்கம் இருந்தாலும் அதைப் பின்னுக்குத் தள்ளி நம்முடைய பாரம்பரியப் பெருமையைப் பேசும் ஒரு அழகிய ஆவணமாக மிளிர்கிறது இச்சிறுகதை.

அயல்நாட்டு வாழ்க்கையில் எப்போதும் காசு காசு என்று பணம்பிடுங்கும் மனைவியோடு எரிச்சலும் சலிப்புமாய் இல்லறம் நடத்துபவரையும் திருமண பந்தம் ஏதுமில்லாமலேயே பந்துக்களுக்கு உதவி செய்து அதில் ஆத்ம திருப்தி காண்பவனையும் ஒரே கதையில் காட்டி வாழ்க்கையின் இருவேறு கோணங்களைக் காட்டும் கதை காட்சிப்பிழை.

மனைவிமக்களைப் பிரிந்து வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவனுக்கு, மனைவியின் பணத்தேவை மற்றும் விளக்கம்தரப்படாத நடத்தைகளின்பால் இயல்பாய் எழும் மனக்குடைச்சல் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது ரபீக் @ ஜிமெயில்.காம் கதையில். இறுதியில் கதாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல பெரிய அசம்பாவிதங்களைத் தடுக்க சில சிறிய விபத்துகள் தேவைதான் என்றாலும் இரண்டிலுமே பாதிக்கப்படுவது சமீமா போன்ற அப்பாவி ஜீவன்களே என்னும்போது வருத்தமெழாமல் இல்லை.

இறுதிவரை மர்மக்கதை போன்ற திகிலுடன் வாசிக்கவைத்த கதை பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா? வியக்கவைக்கும் பல அறிவியல் சங்கதிகளை பல கதைகளிலும் போகிறபோக்கில் அநாயாசமாக அள்ளித்தெளித்துவிட்டுப் போகிறார். வியப்பு மறைய நமக்குதான் நேரமெடுக்கிறது.

அவரு அனில்கும்ளே மாதிரி கதையை வாசிக்கத் துவங்கிய சற்று நேரத்திலேயே எனையறியாது என் இதழோரம் அரும்ப ஆரம்பித்த புன்னகை, அடுத்தடுத்த பத்திகளில் அடக்கமுடியாத சிரிப்பாக விரிய.. புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வெகுநேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். ‘நீ ஆசை காட்டி என்னை மோசம் செஞ்சிட்டே இந்த டயலாக்கை தாண்டுவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது.

வாழ்வின் பிடிப்பறுந்த நிலையில் முதியோர் இல்லத்தில் வாழும் வயோதிகர்களின் வேதனை தரும் தனிமை ஒரு புறம்கணவன் மனைவி இருவருமே பணிக்குச் செல்லவேண்டிய சூழலில் குழந்தைகளைப் பரிவுடனும் அக்கறையுடனும் பார்த்துக்கொள்ள இயலாத சூழல் இன்னொரு புறம். இரண்டு பிரச்சனைகளுக்கான தீர்வையும் ஒற்றைப்புள்ளியில் பிணைக்கும் அழகானதொரு கதை பனங்கொட்டை சாமியார்.

மனத்துக்கு நெருக்கமாய் வரும் ரசனையான வரிகள் இதம். உதாரணத்துக்கு மனிதரில் இத்தனை நிறங்களா கதையில் கேம்ப்ரிட்ஜ் பற்றிக் குறிப்பிடும் போது ஊரே பாலுமகேந்திரா படம் போல காட்சியளித்தது. பாலுமகேந்திராவையும் அவருடைய ஒளிப்பதிவையும் அறியாதவர்களாயிருப்பின் இந்த ஒற்றைவரிக்குள் பொதிந்திருக்கும் அழகியலைப் புரிந்துகொள்ள இயலாது.

வீடு என்பது சில இடங்களில் வீடு என்றும் சில இடங்களில் மிடு என்றும் குறிப்பிடப்படும்போது புரிதலில் மெல்லிய குறைபாடு. மிடு என்பது வட்டாரவழக்காக இருக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றபடி வெகு அழகான இயல்பான எழுத்தோட்டம். எழுத்தோட்டத்துடன் கலந்து ஆங்காங்கே இழைந்திருக்கும் நகைச்சுவை சிறப்பு. சில இடங்களில் முறுவல் சில இடங்களில் குபுக்கிடும் சிரிப்பு. கடிநகையோடு சில இடங்களில் நையாண்டியும் வஞ்சப்புகழ்ச்சியும் தலைகாட்டிப்போவதும் சிறப்பு.

நூலை வாசித்து முடிக்கையில், வளைகுடா நாடுகளில் நாமே பயணித்துவந்ததைப் போன்ற உணர்வைத் தருவதோடு, அங்கு வாழும் மாந்தரின் மனவியல்புகளை, சின்னச்சின்ன மகிழ்வுகளை, எதிர்கொள்ளும் சங்கடங்களை, வேதனைகளை, தனிமைத்துயரை, ஏக்கத்தை, ஆதங்கத்தை என அனைத்து உணர்வுகளையும் மிக அற்புதமாய் பதிவுசெய்து நம்மை அச்சூழலில் இருத்தியிருப்பது போல் உணரச்செய்வதே இந்நூலின் வெற்றி.

கண்களை ஈர்க்கும்வண்ணத்தில் அட்டைப்பட ஓவியமும், வாசிக்கத் தோதான இடைவெளிவிட்டு, கண்ணை உறுத்தாத எழுத்துவடிவமும் பார்த்தவுடனேயே வாசிக்கத்தூண்டும் அழகு. குறுக்கிடும் சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்துப் பார்த்தால் குறையென்று சொல்ல எதுவுமில்லை.  மனமார்ந்த வாழ்த்துகள் கனவு ப்ரியன்.

&&&&&&