11 November 2014

துளிர் விடும் விதைகள் என் பார்வையில்...




துளிர் விடும் விதைகள் – கவிதைத்தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன். தோழி கிரேஸின் தமிழார்வம் எப்போதுமே என்னை மிகவும் வியக்கவைக்கும். ஐங்குறுநூற்றுப் பாடலில் வரும் களவன் என்ற சொல்லுக்கான சரியான பதத்தை அறிந்துகொள்ள அவர் எடுத்த முயற்சிகள் வியப்பின் உச்சத்துக்கே என்னை அழைத்துச்சென்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் சங்க இலக்கியப் பாடல்களை அவர் தெளிவுற விளக்கும் பாங்கு என்னை அவரது பதிவுகளின்பால் பெரும் ஆர்வம் கொள்ளச் செய்திருந்தது. அவருடைய கவிதைகளைத் தவறாமல் வாசிக்கவும் தூண்டியது.

தோழி கிரேஸின் கவிதை நூல் வெளியீடு நடைபெறுவது அறிந்து மகிழ்ந்தேன். என் வாழ்த்துகளை மானசீகமாக அனுப்பிவைத்துவிட்டு என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒருநாளில் கிரேஸிடமிருந்து தகவல் வந்தது. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவர் அமெரிக்கா கிளம்புவதாகவும் எனக்கு அவரது நூலின் மின்னூல் வடிவத்தை அனுப்பிவைப்பதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வளவு பணிகளுக்கிடையில் என்னை நினைவில் வைத்திருந்து அனுப்பிய அவரது அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோகிறேன். அவரது கவிதைகள் முன்பே பரிச்சயம் என்றாலும் ஒரு தொகுப்பாய் வாசிப்பது மாறுபட்ட அனுபவம்தான்.

கவிதை நூலுக்கு அழகும் சிறப்பும் சேர்க்கின்றன கவிஞர் முத்துநிலவன் ஐயா எழுதிய அணிந்துரையும், திரு. ராஜவேல் நாகராஜ் அவர்களுடைய முகவுரையும் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்களுடைய  முன்னுரையும் கிரேஸின் தன்னுரையும்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள். இங்கு தோழியோ மாதா பிதாவுக்கு முன்னால் தமிழ்த்தாயை வணங்கித்தான் பாக்களைத் துவங்கியிருக்கிறார். அன்னை தந்தையை அந்தந்த தினங்களில் வாழ்த்துவது அன்னை தந்தையின் அன்புக்கும் அவர்களுடைய ஆயுட்கால உழைப்புக்கும் முன்னால் வெகு சிறியதே என்கிறார்.

தந்தையின் அன்பைப்பற்றிக் குறிப்பிடும்போது

சூரியனுக்கு ஒரு சுடர் தருவதா?
கடலுக்கு ஒரு துளி தருவதா?

என்று கேட்கிறார். சூரிய அளவு அன்பைப் பெற்று சுடர் அளவு திருப்பித் தருகிறோம் என்னும் சிந்தனை எவ்வளவு வலியது. ஆனால் தாயின் அன்பைக் குறிப்பிடுகையில் என்ன சொல்கிறார் பாருங்கள். 

அளவிட முடியாத அவள் அன்புக்கு முன்
நன்றியில் அடைக்கமுடியாத அவள் அன்புக்கு முன்
வணங்குகிறேன் நேசிக்கிறேன்
அவள் அன்புக்கு முன் –
என்ன செய்தாலும் நிகராகாது அன்றோ?

முதலில் தமிழைப் போற்றி, தொடர்ந்து தாய் தந்தையை வணங்கி அடுத்த அற்புத உறவாய் நட்பைப் பாடி நம் நெஞ்சம் நிறைத்துவிட்டார்.

நண்பர் தினம் ஓர் தினம் ஆனாலும்
நண்பருடன்தான் அனைத்து தினமும்

என்கிறார் நட்பு இல்லையேல்.. கவிதையில்.

இயற்கை, சமூகம், வாழ்வியல் குறித்தான அக்கறை கிரேஸின் ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுவது சிறப்பு. மழையின் சார்பாக, மரங்களின் சார்பாக, நீரின் சார்பாக, நிலத்தின் சார்பாக என இயற்கையின் இருப்புகள் அனைத்தின் சார்பாகவும் பேசுகிறார். ஆதங்கம், ஆற்றாமை, குமுறல், கோபம், கெஞ்சல் என்று பல்லுணர்வுக் கலவையாய் தன்னுணர்வுகளை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.

ஓவியத்திலா காட்டவேண்டும்? என்ற கவிதையில்…

அறியாயோ? கண்ணைத் திறவாயோ மனிதா? – உன்
சந்ததிக்கு எம்மை ஓவியத்திலா காட்டவேண்டும்?
தோலிற்கு எம்மையும், மரத்திற்கு காட்டையும்
பேராசைக்கு இயற்கைச் சூழலையும் பலியாக்காதே!

எந்த விலங்கினத்தின் பார்வையில் எழுதப்பட்டது என்பது கவிதையின் எந்த இடத்திலும் வெளிப்படுத்தப்படவில்லை. புலியோ  மானோ சிங்கமோ சிறுத்தையோ இருக்கலாம். தோலைக் குறிப்பிடாவிடில் அதை ஒரு யானையாகவும் கொள்ளலாம். இன்னதுதான் என்று வரையறுக்கப்படாதது முதலில் ஒரு குறை போல் தெரிந்தாலும் காடுகள் அழிக்கப்படும்போது பாதிக்கப்படுபவை ஒட்டுமொத்த காட்டுவிலங்குகள்தாம் என்பதால் காட்டுவிலங்குகளில் எவற்றை வேண்டுமானாலும் வாசிப்பவர் உள்ளத்தில் தோன்றும் வினாவுக்கான விடையாய்ப் பொருத்திக்கொள்ளமுடியும் என்பதே இக்கவிதையின் சிறப்பாக அமைந்துவிடுகிறது.

ஆழி சேர்ந்திடுவேனோ மனம் மகிழ்ந்து? என்ற ஆற்றின் கேள்வியில் தொனிக்கிறது கலக்கம். நெகிழியின் குவிப்பால் ஆழி சேரும் வழி அடைபட்டுக்கிடப்பதை ஆதங்கம் மேலிட ஆறு தன் மொழியில் விடுக்கும் வேண்டுகோள் மனத்தை நெகிழ்த்துகிறது.

மழைநீரின் சேமிப்பின் மகத்துவமும் உணர்த்துகிறார்.

சொட்டு நீரும் தேவையின்றி சொட்டாமல்
கொட்டும் மழைநீர் சேமிப்போம் நாளைக்காய்!

என்கிறார். நீரை சேமிக்க சொன்னதோடு நின்றுவிடாமல் செயலிலும் இறங்குகிறார்.

அடப்போம்மா
நீதான் பூமியக் காப்பாத்தப் போறியா?
என்றாள் அவள்
நான்தான் இல்லை,
நானும்தான்
என்றேன் நான்.

அவ்வளவுதான். இந்த சிறு முயற்சியை வாசிக்கும் ஒவ்வொருவரும் கையிலெடுத்தாலே போதுமே.. சிறுதுளிகள் பெருவெள்ளமாகும்போது சிறு முயற்சிகள் பெருஞ்சாதனையாகாதா என்ன? அதுதானே தன் கவிதைகளின் நோக்கமும் என்கிறார் தோழி கிரேஸ்.

இயற்கைச்சூழல் மற்றும் சமூகக் கேடுகளை உணரவும், நல்ல மாற்றம் ஏற்படவும் எங்கோ ஒரு இடத்தில் என் கவிதைகள் வழிவகுக்குமானால் அதுவே என் கவிதைகளின் வெற்றி என்கிறார் தன்னுரையில்.

அடுத்து காதல் கவிதைகள்..

காதலின் அடைமொழிகள் தேவையில்லை, அடையாளத்தைப் பறிக்காமல் இருந்தாலே போதும், அதுவே காதலாகும் என்கிறார் என்னை நானாகவே கவிதையில்.

எதனோடும் உருவகிக்க வேண்டாம்
ஏதேதோ உவமையிலும் புகழவேண்டாம்
என்னை நானாகவே விரும்பிடு – என்பாதியே!

நிபந்தனையற்ற அன்பை பறைசாற்றுகிறது எப்படியும் பிடிப்பது கவிதை.

அனைத்திற்கும் ஒரு ‘தான்’ இருக்க
நீ மட்டும் எப்படியும் எப்படியும் பிடிப்பதெப்படி?

நியாயமான கேள்விதான். நிபந்தனையற்ற அன்பைக் கூறும் இந்தக் கவிதையை ரசிக்கும் வேளையில் நிபந்தனை சொல்லும் காதலொன்றும் புருவமுயர்த்தச் செய்கிறது.

எனக்காக எதுவும் செய்வாயா?
தன்மானம் விட்டுக்கொடுக்கும் எதுவும் தவிர.

அட இதுதான் புரிதல், இதுதான் காதல் என்று கொண்டாடுகிறது மனம்.
பெண்ணுக்கு அழகு அணிகலன்களில் இல்லை, அன்புக்குரியவனின் அரவணைப்பே என்பதை இனிக்கும் இலக்கிய வரிகளால் என்ன அழகாக சொல்கிறார் இனிக்கும் பண்டிகை உன்னுடனே கவிதையில். எண்கோவை காஞ்சி, ஏழுகோவை மேகலை, மதலிகை, கண்டிகை போன்ற பண்டைய அணிகலன்கள் பற்றியும் அறிந்துகொள்ளவும் முடிகிறது இக்கவிதையின் வாயிலாய்.

முகம் புதைத்தாள் அவன் ஆகம் கவிதையின் ஆரம்ப வரிகள்

பாண்டில் ஏற்றிச் சின்மலர் சூடி
இன்னே வருவாரா என் தலைவர் என
மேன்மாடத்தில் கரங்கள் பனிப்பப்…

இந்தக் கவிதையும், செம்பருத்தி அவிழ வராரோ, தலைவன் தலைவி பாகற்காய், இனிமையிலும் இனிமை போன்ற கவிதைகளும்  இந்தக் கவிதைப் புத்தகத்தில் உள்ள கவிதைகளின் தளத்தில் இணையவியலாத தனித்துவக் கவிதைகள். முற்றிலுமாய் மாறுபட்ட தளத்தில் இயங்கும் இக்கவிதைகள் கிரேஸின் இலக்கியத்திறனுக்கு இனியதொரு சான்று. கவிதைகளின் வரிகளை வாசிக்க வாசிக்க சங்க காலக் காட்சிகள் மனத்தில் விரிந்துகொண்டே போகின்றன. கவிதைகளின் அழகையும் இலக்கிய ரசனையையும் மீறி அவ்வளவு எளிதில் நம்மால் விடுபடவியலாது.

இயற்கையை வர்ணிக்கும் கவிதைகளில் ஒரு குழந்தையின் உற்சாகமும் கைக்கொட்டிக் களிக்கும் குதூகலமும்தான் தெரிகிறது. வாசிப்போரையும் குழந்தையாய் மாற்றும் ச்சூ.. மந்திரக்கவிதைகள்…

அணில் கவிதை அசத்துகிறது. அணிலின் கீச்சொலியை வார்த்தைகளால் சொல்லமுடியுமானால் எப்படி சொல்வது? இதோ கிரேஸ் கற்றுத்தருகிறாரே.. ஸ்குவீக் ஸ்குவீக்.. என்று.

அணிலின் ஸ்குவீக் ஒலிக்கு என்ன காரணம் என்று ஆராய்கிறார். அவரோடு சேர்ந்து நாமும் அந்த தென்னங்கீற்றிலாடும் அணிலை ரசிக்கிறோம்.

கடற்கரை கிளிஞ்சல்களும் அவர் கவிதை வரிகளில் வர்ணிக்கும் வரம்பெற்று விடுகின்றன.

ஆழியின் அளவிலாச் செழிப்பை
வாழ்ந்த உயிர்களின் அடையாளத்தை
அலைகளோடு அழகாய்ச் சொல்லும்
கரைசேர்ந்த கண்கவர் ஓடுகள்!

மண்ணிற்கும் விண்ணிற்கும் காதலாம். இடையில் தூதாய் தேவதாரு மரங்களாம். கவிஞரின் கற்பனை அபாரம்.. அல்லவா!

மனை உறை புறாவின் சேவலும் பெடையும் கொண்ட சிங்காரக்காதல் கண்ணுக்குள் விரிகிறது சிங்காரக் காதல் காட்டி கவிதை வரிகளை வாசிக்கும்போது..

இறகால் தூவுதல் போலே… கவிதையில் தாய் நீராட்டும் இளந்தாய் போல என்ற வரிகளில்தான் எவ்வளவு தாய்மை…  தாயைத் தெரியும். அதென்ன இளந்தாய்? இப்போதுதான் தாயாகியிருப்பவள். ஆம். புதிதாய்ப் பிள்ளை பெற்றுவந்த தன் மகளை மனைப்பலகையில் உட்காரவைத்து பதமான வெந்நீரால் குளிப்பாட்டுகிறாள் தாய். பூரித்து நிற்கிறாள் மகள். இது ஒரு கொடுப்பினை அல்லவா? தாய்மையின் இரு வரங்களையும் ஒருசேர அனுபவிக்கும் தருணமல்லவா அது? ஆஹா.. நினைக்கையிலேயே அந்த இதம் நெஞ்சுக்குள் பரவுகிறதே.. அந்த இளந்தாயைப்போலத்தான் தென்னையும் பூரித்து தன் பசுங்கரங்களில் மழையை ஏந்தித் தன் தளிர்மேனியில் மென்மையாய் இறக்கிக்கொள்கிறதாம்… வாசிக்கையிலேயே நெஞ்சத்துள் தோன்றும் நினைவுகள் இன்பம்!

இளங்காலை நேரமது. காக்கை அழைக்கிறது, அணில் கூப்பிடுகிறது, புறா பேசுகிறது. தென்னையும் தலையை ஆட்டிக் கேட்டுக்கொண்டிருக்கிறது.  தென்னைக்கு வேறு வேலை இல்லை. கேட்டுக்கொண்டிருக்கிறது. இப்படி நாமும் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தால் இன்றைய பொழுது என்னாவது? கவிஞரை அங்கே குக்கர் அழைக்கிறது.. ரசனையும் கடமையுமாய் கலந்து புலர்கிறதாம் கவினுறு காலைகள்.. என்ன அற்புதமான ரசனை!

சமூக அக்கறையும், சமூகத்தின் வஞ்சமுகம் குறித்த விழிப்புணர்வையும், வக்கிரமுகம் குறித்த சாடல்களையும் முன்வைக்கின்றன சமூகம் குறித்த அவரது கவிதைகள். சமூகத்தின் அவலங்களும் அலட்சியங்களும் அவற்றில் சுட்டிக்காட்டப்படுகின்றன.

நாளைய சமுதாயம் கவிதையில் எப்படியெல்லாம் இன்றைய துளிர்கள் தவறான போக்கில் திசைதிருப்பப்படுகிறார்கள் என்பதை உதாரணங்களோடு விளக்குகிறார். நாமும் அந்தப் பட்டியலில் இருக்கிறோமா என்று நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ளவேண்டிய தருணமிது.

எது உண்மையான திருநாள் என்று கிரேஸ் சொல்வதில் இருக்கும் உண்மையை மறுப்பார் உண்டா?

சமூகமெனும் காட்டுக்கான விருட்சங்களுக்கு விதை தூவப்பட்டு வளர்ப்பதென்னவோ வீட்டுக்குள். இந்த துளிர் விடும் விதைகள் நல்லமுறையில் அன்பெனும் நீரூற்றப்பட்டும் நற்பண்புகள் என்னும் உரமிடப்பட்டு இனிமையான குடும்பச்சூழல் என்னும் வேலியிடப்பட்டு வளர்க்கப்பட்டால்தானே நல்லதொரு நேரிய விருட்சங்களாய் நாளை வளரக்கூடும். பெற்றவர்கள் செய்யும் பிழைகளுள் பிரதானமானது மற்றக்குழந்தைகளோடு தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பழிப்பது. அதைச் சுட்டும் கிரேஸின் வரிகள்

அவளைப் போல ஆடு
இவனைப் போல பாடு
அவனைப் போல படி
இவளைப் போல விளையாடு
அவனைப் போல அது செய்
இவளைப் போல இது செய்
விளங்காமல் விழித்த குழந்தை
விளம்பியது விழிவிரித்து
நானாக நான் இருத்தல் எப்பொழுது?
நானாக நான் இருத்தல் பிழையா?

குழந்தையின் பிஞ்சு நெஞ்சம் கேட்கும் கேள்வியைப் பெற்றோர் இனியாவது புரிந்துகொண்டு தங்கள் பேராசைகளைக் கைவிட்டு குழந்தைகளை குழந்தைகளாய்ப் பார்க்கவேண்டும்.

தாய்மையின் சிறப்பை சிலாகிக்கும் கவிதை சிலிர்ப்பூட்டுகிறது. மழலை உண்ணும் அழகோ மனம் நிறைக்கிறது.

படைத்திடும் அனைவருக்கும்
படைப்பாற்றல் அனைத்துமாகும்

என்கிறார் படைப்பு கவிதையில். நிரூபிக்கிறார் கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் கவிபாடும் கவிதையில்.

கையெழுத்தைத் தொலைத்துவிட்டேனே என்று கவிமனம் கதறும் கவிதை வாசிக்கும் நம்மையும் சுருக்கென்று தைக்கிறது.

வாழ்க்கை பற்றிய கவிதைகளில் வெற்றிக்கான பாதையையும் காட்டுகிறார். வாழ்வு சுகப்படும் சூத்திரமும் காட்டுகிறார். கலங்கச் செய்யும் காலத்தின் கணக்கையும் கண்முன்னால் காட்டுகிறார்.

சுருக்கமாகத் துன்பங்கள் தீமைகள் எல்லாம்
தாமரை இலைநீராக அகற்றும் மனம் வேண்டும்

என்று சொல்லி வாழ்வின் இன்பதுன்பங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் காட்டுகிறார்.

மொத்தத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் வெகு அழகாக இக்கவிதை நூலில் அடக்கிக்காட்டியுள்ளார். தமிழின் இனிமையும், சாரமும் கொண்டு இயற்கை சார்ந்த கவிதைகளில் ஈர்ப்பும், சூழல் சார்ந்த கவிதைகளில் சுதாரிப்பும், காதல் சார்ந்த கவிதைகளில் களிப்பும், வாழ்க்கை சார்ந்த கவிதைகளில் உளத்தெளிவுமாக வசீகரிக்கிறார் அன்புத்தோழி கிரேஸ். வாழ்த்துகள் கிரேஸ்.


71 comments:

  1. ஒரு அன்பு தோழியின் நூலுக்கு மற்றொரு அன்பு அக்கா விமர்சனம் எழுதி இருப்பது மகிழ்ச்சியை இருமடங்காக்குகிறது!!! சொல்லின் செல்வியே அட்டகாசமாய் இருக்கிறது உங்கள் மதிப்புரை !!! நலம் தானே அக்கா!

    ReplyDelete
    Replies
    1. நலமே மைதிலி. உங்க அன்புக்கு மிகவும் நன்றிப்பா.

      Delete
    2. 'சொல்லின் செல்வி' கீதமஞ்சரிக்கு மிகப் பொருத்தமான பெயர் :)
      நன்றி டியர்

      Delete
  2. அருமையான விமர்சனம். குழந்தையின் நான் நானாக இருப்பதெப்போது கேள்வி அருமை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஸ்ரீராம். என்னையும் மிகவும் கவர்ந்த வரிகள் அவை.

      Delete
  3. //நானாக நான் இருத்தல் எப்பொழுது?
    நானாக நான் இருத்தல் பிழையா?//
    நானும் நூலினை படித்து மகிழ்ந்தேன் சகோதரியாரே
    தமிழ்ப் புலமையும் ஆங்கில அறிவும் ஒன்றினைந்து காணப் படுபவர்கள் மிகவும் குறைவு
    சகோதரி கிரேஸ் பாராட்டிற்கு உரியவர்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா.

      Delete
    2. உங்கள் பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி அண்ணா

      Delete
  4. குழந்தையின் பிஞ்சு நெஞ்சம் கேட்கும் கேள்வியைப் பெற்றோர் இனியாவது புரிந்துகொண்டு தங்கள் பேராசைகளைக் கைவிட்டு குழந்தைகளை குழந்தைகளாய்ப் பார்க்கவேண்டும்.//உண்மை
    ஆய்வு அருமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

      Delete
  5. நான்தான் இல்லை,
    நானும்தான்//

    அருமை. காதல் கவிதைகளும்!

    அணிலின் கீச்சொலி எழுத்தாக்கம் வாசிக்கும் போதே காது நிறைக்கும்படி.

    எடுத்துக் காட்டியிருக்கும் எல்லாக் கவிதைகளும் எழுதியவரின்/வாசித்தவரின் சிறப்பு காட்டும்படி. நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி நிலாமகள்.

      Delete
  6. கவிதைகள் அருமை என்றால் அதன் விமர்சனம் மற்றொரு அழகு கவிதை போல் அருமையாக இருக்கிறது. N.A.தாஸ்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி தாஸ்.

      Delete
  7. உறங்கும் முன் ஒரு முறை எட்டிப் பார்க்கலாம் என்று அயர்ச்சியுடன் தளம் நுழைந்த எனக்கு இனிய பரிசாய் உங்கள் பதிவு! கவிதைகளை உள்வாங்கி அன்புடன் ஆழமான கருத்துகளைச் சொல்லி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டீர்கள் தோழி! படிக்கப் படிக்க கண்கள் நீர்த் திரையிட்டுக் கொண்டன. மிகவே நெகிழ்ந்தேன்...மனம் கனிந்த நன்றிகள் கீதமஞ்சரி. என் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை..நன்றிபல!

    ReplyDelete
    Replies
    1. இங்கு பதிவிட்ட உடனே உங்களிடம் தெரிவிக்க மறந்தே போனேன் கிரேஸ். ஆனாலும் நீங்கள் உடனடியாக வந்து கருத்திட்டுப் பாராட்டியது கண்டு மகிழ்கிறேன். நல்லதொரு கவிதை நூலை வாசிக்கக் கொடுத்த வாய்ப்புக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நன்றி கிரேஸ்.

      Delete
  8. ஒவ்வொரு கவிதையும் அழகு. அக்கவிதைகளின் விமர்சனம் அதற்கு ஆபரணத்தை பூட்டி மேலும் அழகுறச் செய்தது.

    "//அவளைப் போல ஆடு
    இவனைப் போல பாடு
    அவனைப் போல படி
    இவளைப் போல விளையாடு
    அவனைப் போல அது செய்
    இவளைப் போல இது செய்
    விளங்காமல் விழித்த குழந்தை
    விளம்பியது விழிவிரித்து
    நானாக நான் இருத்தல் எப்பொழுது?
    நானாக நான் இருத்தல் பிழையா?//"

    அற்புதம். அற்புதம். இன்றைக்கு மிகவும் தேவையான ஒரு கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ, விமர்சனம் கவிதைக்கு அணிசேர்த்து விட்டது..நன்றி சகோ

      Delete
    2. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சொக்கன்.

      Delete
  9. சகோதரி ”தேன்மதுரத் தமிழ்” கிரேஸ் அவர்களின் கவிதைத் தொகுப்பினை அண்மையில்தான் படித்து முடித்தேன். இந்த பதிவினில் அவரது நூலைப் பற்றி சிறப்பாகவே மேற்கோள்களுடன் சொல்லி இருக்கிறீர்கள். ஒரு சகோதரியின் (கவிஞரின்) பார்வையில் இன்னொரு சகோதரியின் (கவிஞரின்) கவிதை நூல். நல்ல விமர்சனம்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. வணக்கம் தோழி! தேன் மதுரத் தமிழ் ஆக பெயரிலேயே தமிழ் சொட்டுவதால் தான் நாவிலும் சொட்டுகிறதோ வாழ்க்கைக்குகந்த எத்தனை விடயங்களை வரிக்கிறார் வரிகளில். விழிப்புணர்வை தூண்டும் படியாய், அவற்றை எல்லாம் வாசித்து வர்ணிக்கிறாரே இந்த மஞ்சரி நம் நெஞ்சம் நிறையும் படியாய் இப்படி..... அழகுக்கு அழகு சேர்க்கிறார் பாருங்கள்.
    \\\\மொத்தத்தில் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் வெகு அழகாக இக்கவிதை நூலில் அடக்கிக்காட்டியுள்ளார். தமிழின் இனிமையும், சாரமும் கொண்டு இயற்கை சார்ந்த கவிதைகளில் ஈர்ப்பும், சூழல் சார்ந்த கவிதைகளில் சுதாரிப்பும், காதல் சார்ந்த கவிதைகளில் களிப்பும், வாழ்க்கை சார்ந்த கவிதைகளில் உளத்தெளிவுமாக வசீகரிக்கிறார் அன்புத்தோழி கிரேஸ். வாழ்த்துகள் கிரேஸ். ////
    மிக்கநன்றி! தோழி இருவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள் .....!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து வாழ்த்தியமைக்கு நன்றி இனியா.

      Delete
  11. உளமெனும் வயலை அறிவென்னும் ஏர்கொண்டு உழுது
    நல் எண்ணங்களை விதையாகத் தூவி
    வளர்த்தெடுத்த கவிதை விளைச்சல்கள் அத்தனையும்!

    எங்கள் அன்புத்தோழி கிரேஸின் ஆற்றல் அளவிடக் கூடியதோ?
    அனுபவித்து எழுதியுள்ளீர்கள் கீதமஞ்சரி! அற்புதம்!

    மிகச் சிறப்பு! இருவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றி இளமதி

      Delete
    2. ரசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி இளமதி.

      Delete
  12. அழகுத் தமிழ் அதுவும் தேன்மதுரம் குழைத்துத் தந்தால் கசக்கவா செய்யும். எனக்கும் தோழி பைல் அனுப்பினாங்க. என் நேரக்கொடுமை இன்னமும் படிக்க நேரம் வாய்க்கவில்லை. எத்தனை அழகாய் படித்து தாங்கள் அற்புதமாய் விமர்சனமும் எழுதி அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள் தோழி. இன்னமும் பல புத்தகம் வெளியிட தோழி கிரேஷிற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சசி.

      Delete
  13. மிக நன்றாக விவரிக்கப் பட்டுள்ளது.
    வாசிக்க ரசனையாக உள்ளது
    இருவருக்கும் வாழ்த்துகள்.
    மேலும் வளர்க!....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி தோழி.

      Delete
  14. ஒரு தங்கையின் அருமையான கவிதைத் தொகுப்பை இன்னொரு சீனியர் தங்கை அருமைாக -வரிக்கு வரி படித்து, வார்த்தைக்கு வார்த்தை ரசித்து- மதிப்பிட்டிருப்பதைப் பாராட்டலாம் என்று வந்தால் இங்கு எத்தனை எத்தனை தங்கையர் கூட்டம்! சகோதரி கீதமஞ்ச்ரிக்கு நன்றியும் கருத்திட்ட அனைவர்ககும் கிரேஸின் அண்ணனின் நன்றிகள் பல. வணக்கம்.
    பொதுவாக இரண்டுபெண்களோ புலவர்களோ இருக்குமிடத்தில் மூன்று போலீஸ் வேண்டுமென்பார்கள் அதைப் பொய்யாக்கி அன்பால் ஒருவரை ஒருவர் அணைந்துகொள்வது பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. இதுபோல் ஒருவர் படைப்பை மற்றவர் பாராட்டி அறிமுகம் செய்தாலே தமிழ்வலைப்பதிவுகள் பிரபலமாகுமே? தொடருங்கள் சகோதரிகளே!.

    ReplyDelete
    Replies
    1. உண்மை அண்ணா, அருமையான அன்புத் தோழியர் பலர் எனக்கு.
      நன்றி அண்ணா.

      Delete
    2. தங்கள் வருகையும் மனந்திறந்த பாராட்டும் கண்டு மகிழ்வும் நெகிழ்வும். கவிதை நூலில் உங்கள் அணிந்துரை அழகுக்கு அழகு சேர்க்கிறது. மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. நல்லவிரிவான விமர்சனம்.....கிரேஸின் முயற்சிகள் பாராட்டுக்குரியது .வாழ்த்துகள்..இருவருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா.

      Delete
  16. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கவிதைகள்... "என்பாதியே" மிகவும் அருமை.. இன்னும் புத்தகம் படிக்கவில்லை.. படித்ததும் பகிர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்கூல் பையன்.

      Delete
  17. வணக்கம்! சகோதரி கிரேஸின் கவிதை நூலை,ஆழமாகவும்,அழகாகவும் விமர்சனம் செய்துள்ளீர்கள்!
    "என்னை நானாக விரும்பிடு" சுயத்தின் வெளிப்பாடான வரிகள்.
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி நண்பரே.

      Delete
  18. ரொம்பப் பொறுமையாக வாசித்து வரிக்கு வரி விமர்சனம் எழுதியிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
    சகோதரி கிரேஸ் அவர்கள் இன்னும் பல கவிதை நூல்களை வெளியிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி குமார்.

      Delete
  19. தேடித் தேடிச் சிறப்பாக
    சிந்திக்க வைக்கும் அடிகளை
    நன்றாக அலசி உள்ளீர்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  20. துளிர் விடும் விதை மட்டுமின்றி, சுயத்தை இழக்க மறுக்கும் அனைவரின் சார்பாகவும் கவிஞர் கேட்கும் கேள்வி அருமை:-
    “நான் நானாக இருத்தல் எப்போது?
    நானாக நானிருத்தல் பிழையா?”
    ‘நீரின்றி அமையாது உலகு,’ என்ற உண்மையை உணர்ந்து
    வெறும் பார்வையாளனாக இல்லாமல், இப்பூவுலகின் நண்பனாக நீரைச் சேமிக்க நினைக்கும் செயல் வீரனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் கவிஞர் பாராட்டுக்குரியவர்!
    “நான் தான் இல்லை
    நானும் தான்!”
    சமூக சிந்தனை, சமூக அவலங்கள், இயற்கையைப் பேணுதல், மழைநீரைச் சேகரித்தல் போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கவிஞரின் கவிதை வரிகளைச் சுட்டிக்காட்டி, வாசிக்கும் அனைவரையும் உடனே நூலை வாசிக்கத் தூண்டும் அருமையான விமர்சனம் எழுதிய கீதாவிற்குப் பாராட்டுக்கள்! நூலாசிரியர் கிரேஸுக்கும் பாராட்டுக்களுடன் கூடிய வாழ்த்துக்கள்!
    ஆற்றின் கேள்வியில் தொணிக்கிறது கலக்கம் என்பதில் தொனியா? தொணியா என்று எனக்குச் சிறு ஐயம்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி அக்கா. தொனிக்கிறது என்பது தான் சரி. பிழையை சுட்டியமைக்கு நன்றி அக்கா. திருத்திவிட்டேன்.

      Delete
    2. பாராட்டுகளுக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி

      Delete
  21. கவிதை நூலை நான் படித்தேன். தங்களது விமர்சனம் என்ற நிலையில் கவிதையின் ஆழத்தை இன்னும் அதிகமாகப் புரிந்துகொண்டேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.
      ஆமாம், அருமையான விமர்சனம் எழுதி இருக்கிறார்கள் கீதமஞ்சரி.

      Delete
  22. அழகுத்தமிழில் இனிய விமர்சனம், தமிழ்ப் படைப்பாளி கவிதாயினி கிரேஸ் அவர்களுக்கும் உங்களுக்கும் நல் வாழ்த்துக்கள் ... மேற்கோள் காட்டிய விதம் சிறப்பு ...

    ReplyDelete
  23. மிக அருமை.. உள்ளே புகுந்து குளித்து முத்தெடுப்பதுபோல.. ஆளமாக அலசி விட்டீங்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆழமாக அலசி அருமையாய் விமர்சனமும் எழுதிவிட்டார்கள்

      Delete
  24. விரிவான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  25. தமிழின் இனிமையும், சாரமும் கொண்டு இயற்கை சார்ந்த கவிதைகளில் ஈர்ப்பும், சூழல் சார்ந்த கவிதைகளில் சுதாரிப்பும், காதல் சார்ந்த கவிதைகளில் களிப்பும், வாழ்க்கை சார்ந்த கவிதைகளில் உளத்தெளிவுமாக வசீகரிக்கிறார் அன்புத்தோழி கிரேஸ். வாழ்த்துகள் கிரேஸ்.//

    கிரேஸ் அவர்களின் மின் புத்தகத்தை விமட்சனம் செய்து கிரேஸ் அவர்களின் நூலை மிக அழகாய் இவ்வளவு நாள் படிக்காமல் தவற விட்டு விட்டேனே என்று கவலைக் கொள்ள வைக்கிறது. கிரேஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அழகாய் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    குழந்தை கவிதை மிக அருமை.

    ReplyDelete
  26. கவிதைத்தொகுப்பை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். நல்ல தீவிரமான வாசிப்பு. எனது வாழ்த்துக்கள். ஒரு நூலை அனுப்புங்களேன். நாங்களும் வாசித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள் சகோ , இந்த மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். kodimalligai@gmail.com
      நன்றி

      Delete
  27. விருட்சமாக இருக்கும்துளிர்.தோழிகிரேஸ்,துன்பங்கள்,தீமைகள் எல்லாம்தாமரைஇலைநீராக அகற்றும்மனம் மட்டும்மல்ல,முகமும் அப்படித்தான் கள்ளம்கபடமற்றது.நானும் வரிவிடாமல் மதுரைமாநாட்டின்
    அடுத்தநாளேபடித்துவிட்டேன்,(படிச்சி என்ன செய்ரதுதொழி கீதமஞ்சரியும் படிச்சாஙகல்ல..)அழகுதோழி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.