27 March 2012

சின்ன நிலாவின் சேட்டைகள் (2)




மதியவேளையொன்றில் பொம்மைகளுடன்
விளையாடிக்கொண்டிருக்கிறாள் நிலா.
நேற்றைய கோயில் பயணம்
நினைவில் இன்னும் பயணம்.
டெடிபேருக்குப் பூக்கள் தூவி
புது வஸ்திரமும் சாத்தி
அவதரிக்கச் செய்துவிட்டாள்
ஆதிக்கடவுளரில் ஒன்றாய்.

மதிய உணவுக்காய் வீடுவந்த மாமனிடம்
சாமி கும்பிட்டுக்கொள் மாமா என்கிறாள்.

கரடியெல்லாம் சாமியாகுமா?

கேலியை அலட்சியம் செய்து கேட்கிறாள்,

யானையும் குரங்கும் சாமியாகுமென்றால்
கரடி ஏன் சாமியாகாது?

வாயடைத்து நிற்கிறான் மாமன்,
மருமகளின் வாய்சாலம் கண்டு.

******************


எல்கேஜி படிக்கும் நிலாவிடம்
தன் பெயரை எழுதச் சொல்லி
ஆசையுடன் கேட்கிறார் தாத்தா.

ரொம்பச் சுலபம் என்றபடியே சொல்கிறாள்,
J போட்டு ஒரு ball வரைந்துவிடவேண்டும்.
திகைத்து நிற்கும் தாத்தாவிடம் கேட்கிறாள்,

ஜேபால்தானே உங்க பெயர்?

சுதாரிப்புக்குப் பின் மெச்சுகிறார் தாத்தா,
பேத்தியின் பேச்சுவன்மையை!
பெயர் சொல்லத்தானே பேரப்பிள்ளைகள்?

*********************




ஊரிலிருந்து தாத்தாவால் அழைத்துவரப்பட்டு
தன் பள்ளியில் சேர்த்துவிடப்பட்டப்
புதிய பொம்மைப்பிள்ளைகளுக்கு
மும்முரமாய்ப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறாள் நிலா. 

சாப்பிட வாம்மா நிலா.. 

தாத்தா.. நான் டீச்சர் விளையாட்டு விளையாடிட்டிருக்கேன்...

சாப்பிட்டுப் போய் விளையாடம்மா..

மாட்டேன்.. சாப்பாடு வேணாம்.

அப்படிச் சொல்லக்கூடாது. வந்து புவ்வா சாப்பிட்டுப்போம்மா..

புவ்வாவா? தோ.. வரேன்.

தட்டில் சோறு கண்டு மிரள்கிறாள்.

அம்மாஎனக்கு சோறு வேண்டாம்.
தாத்தா சொன்ன புவ்வாதான் வேணும்.

இதுதானம்மா புவ்வா..

இல்லை. இது இல்லை. எனக்கு புவ்வாதான் வேணும்...

அடம்பிடிக்கும் நிலாவை அடக்கும் நோக்கில்
தாத்தா கேட்கிறார்,

நிலா  நல்லபிள்ளையா? கெட்டபிள்ளையா? 

நான்.. நான்
நல்லபிள்ளை மாதிரி கெட்டபிள்ளை!

இப்படியொரு பதில் எதிர்பார்த்திராதத் தாத்தா
அடக்கமாட்டாமல் சிரித்துவைக்கிறார்.

24 March 2012

அலமேலுவின் ஆசை



கொல்லைபுறத் தாழ்வாரத்தில் கழிவறை அருகில் படுக்கை போடப்பட்ட பிறகு வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதே அலமேலுவுக்குத் தெரியவராமல் போயிற்று. இன்று அதிசயமாய் உள்ளேயிருந்து கருவாட்டுக் குழம்பின் மணம் மூக்கைத் துளைக்க, மூடியிருந்த போர்வையை மெல்ல விலக்கினாள், அந்த மூதாட்டி.

ம்ம்ம்........ஆழமாய் மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றினாள். நல்ல வாசனை! அலமேலுவுக்கு நாவில் நீரூறியது.அந்த சுகத்திலேயே மனம் காற்றாடியென உயரே எழ முற்பட, நூலை சட்டென்று அறுப்பதுபோல் ரஞ்சனியின் குரல் கேட்டது.

''
கஞ்சி!''

ஒற்றைச்சொல்! கூடவே 'ணங்'கென்ற சத்தத்துடன் கிண்ணம் வைக்கப்பட்டு, மேலெழும்பிச் சிதறிய துளிகளில் ஒன்று, படுத்திருந்த அலமேலுவின் உதட்டோரம் தஞ்சமடைந்தது. அலமேலு அலுப்புடன் கண்களை மூடிக்கொண்டாள். மூடிய இமைகளின் வழியே கண்ணீர் வழிந்தோடியது. அவசரமாக போர்வையின் ஓரத்தால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். ரஞ்சனி பார்த்துவிட்டால் வேறுவினையே வேண்டாம். ஒரு போர்க்களத்தையே உருவாக்கி விடுவாள்.

''
தே! உனக்கு என்ன கேடு வந்திச்சு? எழவு விழுந்த வீடு மாதிரி எப்பவும் மூக்கச் சிந்திகிட்டு இருந்தா வீடு விளங்கின மாதிரிதான். நாலு பேர் பார்த்தா என்னைத்தான் ஆகாதவள்னு நினைப்பாங்க! நோயும் பாயுமாகிப்போனாலும் என்னை நோகடிக்கிறதுல மட்டும் எந்தக்குறையும் இல்லை.....எல்லாம் நான் வந்த வழி.....காலம் பூராவும் சீக்காளிக்கு சிரமப்படணும்னு என் தலையில் எழுதியிருக்கு....''
 
இப்படி எவ்வளவோ! எல்லாவற்றையும் கேட்டாகிவிட்டது. அந்தக் கடவுளுக்கும் கருணையில்லையே! காலாகாலத்தில் அழைத்துக் கொள்ளவேண்டாமா? இந்தப் பூமிக்குப் பாரமாக இன்னும் எத்தனை நாள் வைத்திருக்கப் போகிறானோ?

மனம் புலம்பியது. ஆற்றாமை அலைக்கழிக்க, பசித்த வயிறு அவளை எழுந்து உட்கார வைத்தது.

பக்கத்தில் ஆறிப்போன கஞ்சி! அதைக் கஞ்சியென்றும் சொல்வதற்கில்லை. பழைய சோற்றை மிக்சியில் அரைத்து கஞ்சியென்று தருகிறாள். சிலநாள் உப்புக் கரித்து வாயில் வைக்க வழங்காது; அதற்குப் பரிகாரமாக மறுநாள் உப்பில்லாக்கஞ்சி கிடைக்கும்.

அலமேலுவுக்கு விதவிதமாக சாப்பிட ஆசைதான். அதிலும் அசைவ சமையல் என்றால் மிகப்பிரியம். கொஞ்ச காலமாகவே இந்த பாழாய்ப்போன வயிற்றுக்கு எதுவுமே ஒவ்வ மாட்டேன் என்கிறது. எதைச் சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு வந்துவிடுகிறது. எழுந்து நடமாட இயலாத நிலையில் இரண்டொருதரம் கழிவறைக்குப் போகும் வழியெல்லாம் அசுத்தம் செய்துவிட்டாள். அவ்வளவுதான்! ரஞ்சனி பேயாய் மாறிவிட்டாள். இன்ன பேச்சு என்றில்லை; அதற்குப் பயந்துதான் பத்தியமாயிருக்க முடிவெடுத்து கஞ்சி போதுமென்று மருமகளிடம் கேட்டுக்கொண்டாள். அவளுக்கும் வசதியாயிற்று. ஒரு நாளைக்கு வைத்து மூன்று நாட்களை ஓட்டிவிடுகிறாள். பின்னே? அலமேலு குடிக்கும் கால் தம்ளர் கஞ்சிக்காக ஒவ்வொரு வேளையும் புதிதுபுதிதாகவா தயாரிக்க முடியும்?

அதுமட்டுமல்ல; படுக்கையும் கொல்லைப்புறம் போடப்பட்டுவிட்டது. நிலைமை இன்னும் மோசமாகி, தெருவுக்குத் தள்ளப்படுவதற்குள் கடவுள்தான் கருணைகாட்ட வேண்டும்.

கஞ்சியை வாயருகில் கொண்டுபோகும்போதே குமட்டிக்கொண்டு வந்தது. ஒரு நாரத்தையோ, எலுமிச்சையோ இருந்தால் குடித்துவிடலாம். ரஞ்சனியிடம் கேட்க பயமாயிருந்தது. தருகிறாளோ, இல்லையோ, ஒரு பாட்டம் வசைபாடி முடித்துவிடுவாள்.

கருவாட்டுக் குழம்பின் வாசம் மீண்டும் காற்றுவாக்கில் வந்தது. எத்தனை நாளாயிற்று, இதுபோன்றதொரு வாசனை பிடித்து! அலமேலுவுக்கு சிரிப்பு வந்தது. கண்ணும், காதும் கொஞ்சங்கொஞ்சமாய் செயலிழந்து வரும் சமயத்திலும், இந்த மூக்கும், நாக்கும் என்னமாய் சுறுசுறுப்புடன் இயங்குகின்றன.

அலமேலுவுக்கு கருவாட்டுக்குழம்புடன் சோறுண்ண ஆசை மூண்டுவிட்டது. கூடவே அவள் அம்மாவின் நினைவும் வந்துவிட்டது. அம்மா வைக்கும் கருவாட்டுக்குழம்பு தேனாய்தான் இனிக்கும். அவள் கைப்பக்குவத்தை அனுபவித்துச் சாப்பிட அவள் அப்பாவுக்குதான் கொடுப்பினையில்லாமல் போய் விட்டது.அம்மா எதைச் செய்தாலும் அது ருசிக்கும். கருவாட்டுக்குழம்பு வைப்பதில் கைதேர்ந்தவள். கருவாட்டுத்துண்டங்களுடன் கத்திரிக்காய், வாழைக்காய் என்று கண்ணில், கையில் தட்டுப்படும் காய்களையெல்லாம் குழம்பில் சேர்த்துவிடுவாள். சோறு வடித்து முடிந்ததும் விறகை வெளியில் இழுத்து அணைத்துவிட்டு குழம்புச்சட்டியை தணலிலேயே விட்டுவிடுவாள்.

சமையல்தான் முடிந்துவிட்டதே, சோற்றைப்போடுவாள் என்று பார்த்தால் அதுதான் நடக்காது. அழுக்குத்துணி மூட்டையுடன் ஆத்தங்கரைக்குக் கிளம்பிவிடுவாள். அவள் மட்டுமா? அலமேலுவையும் கூட்டிக்கொண்டுதான். கூட்டிக்கொண்டு என்றும் சொல்லமுடியாது. கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டுதான் போவாள். போகுமுன் சிறிது நல்லெண்ணெயும், விளக்கெண்ணெயும் லேசாக சூடுபடுத்தி உச்சந்தலையில் வைத்து சூடுபறக்கத் தேய்த்துவிடுவாள். அம்மா தேய்க்கும் சுகத்தில் தானாக தூக்கம் வந்துவிடும்.

உச்சி வெயிலில் சூடான குளத்தங்கரைப்படிக்கட்டில் உட்கார வைத்து, வடித்த கஞ்சியில் ஏற்கனவே தயாராக கரைத்து வைத்திருக்கும் அரப்புத்தூளை அவள் தலையில் தேய்க்கத்துவங்குவாள். அலமேலுவின் 'கண்ணு எரியுதே, கண்ணு எரியுதே' என்ற பாட்டு அவள் காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளமாட்டாள். அவளும் குளித்துமுடித்து, துணி துவைத்து வீட்டுக்கு வரும்போது பசியில் வயிறு கபகபவென்று பற்றியெரியும்.

வந்ததும் முதல் வேளையாக ஒரு கிண்ணத்தில் சோற்றைப்போட்டு, அகப்பையால் குழம்பை அள்ளி அதில் இட்டுப் பிசைவாள். நீரெல்லாம் சுண்டிப்போய் வெறும் கண்டங்களாக கருவாடும் காய்களும்தான் கிடக்கும். தூக்கமும், பசியும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றையொன்று மிஞ்ச விழையும் பொழுதில் பெரியபெரிய கவளங்களாக சோற்றை உருட்டி வாயில் திணிப்பாள். அரை மயக்கத்தோடு உண்ணும்போதும் அது அமுதமாய்த் தோன்றும். தேனாய் கருவாட்டுக்குழம்பு, அதுவும் தேனினும் இனிய தாயாரின் கையால் பக்குவாய் சமைக்கப்பட்டு, அவள் கையாலேயே ஊட்டியும் விடப்பட்டால் அதை உண்பதைப் போல சுகம் வேறென்ன இருக்கிறது? அம்மா போனபின் அலமேலு எத்தனையோ முறை முயன்றிருக்கிறாள். ஆனால் ஒருநாளும் அந்த ருசி அவள் வைக்கும் குழம்புக்கு வரவேயில்லை. அதையே அவள் கணவர் ஆகா,ஓகோவென்று புகழ்வார்.

தாயிடமிருந்து கணவனிடம் தாவியது அவள் நினைவு. அவர் இருந்தவரை அலமேலுவை தங்கத்தாம்பாளத்தில் வைத்துத் தாங்கினார் என்றுதான் சொல்லவேண்டும். அலமேலுவின் கண்ணில் தூசு விழுந்தாலும் பதறிவிடுவார். அவளுக்கு சிரிப்புதான் வரும். ‘இதென்ன ஊர் உலகத்தில் இல்லாத அதிசயம்?’என்று கேலி செய்வாள்.எனக்கு என் பெண்டாட்டி உசத்திதான்என்பார் அவர்.

அவர் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால், தன்னிலை இப்படி கேள்விக்குறியாகிப் போயிருக்குமா? பார்த்துப் பார்த்து வளர்த்த மகனும் இன்று எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்ட நிலையில்....தன் விதியைத் தானே நொந்துகொண்டாள்.

பசி மீண்டும் தன் பல்லவியைப் பாட ஆரம்பித்துவிட்டது. கஞ்சியைப் பார்த்தாலோ வெறுப்பாயிருந்தது. இன்று மட்டும் கொஞ்சமாய் கருவாட்டுக்குழம்புடன் சோறு கேட்டால் என்ன? ம்கூம்! நிச்சயமாய் ரஞ்சனி தரப்போவதில்லை. கொல்லைப்புறம் மகன் வரும்போது கேட்டுப்பார்த்தால் என்ன? ஒரு கெஞ்சலுடன் கேட்டால் மனமிறங்க மாட்டானா? ஆனால் அவன் அவளுடன் பேசியே பல மாதங்களாகிவிட்டன என்ற நினைவெழுந்தபோது சுயபச்சாதாபமும் எழ, குபுக்கென்று கண்ணீர் வெளிப்பட்டு கன்னங்களில் வழிந்தோடியது.
அந்நேரம் பார்த்தா ரஞ்சனி அங்கு வரவேண்டும்? மொய்த்துக்கொண்டிருந்த கிண்ணத்தை எடுத்துப் போக வந்தவள் கண்களில் நெருப்புப் பறந்தது. அலமேலு அவசரமாகக் கண்களைத் துடைக்க முயல, ஆவேசம் வந்தவள் போல் ரஞ்சனி அலற ஆரம்பித்துவிட்டாள்.

"
இப்ப யாரு போய்ட்டான்னு இப்படி ஒப்பாரி வச்சுகிட்டிருக்கிறே? எங்க எல்லாரையும் வாயில போட்டுகிட்டுதான் நீ போவே! கவலைப்படாதே! "

அலமேலு சொல்லொணாத்துயரம் அடைந்தாள்.

"
ஏம்மா இப்படி பேசுறே? நீங்க எல்லாரும் நல்லாயிருக்கணும் தாயீ, நல்லாயிருக்கணும்!"

"
நீ இருக்கிற வரைக்கும் நான் எப்படி நல்லாயிருக்க முடியும்? உனக்குதான் ஆயுசு கெட்டியாச்சே!"

அலமேலு என்ன செய்வாள், பாவம்! அவளும் தன் மரணத்தை வேண்டாத நாளில்லை; காலனும் கருணை காட்ட மறுக்கிறானே!

ரஞ்சனி வீட்டுக் கூடத்தில் நின்றுகொண்டு கத்திக்கொண்டிருந்தாள். மகன் சாப்பிட வந்திருக்கிறான் போலும். இவள் இப்படி கத்திக்கொண்டிருந்தால் அவன் எப்படி நிம்மதியாக சாப்பிட முடியும்? அலமேலு ஆயாசப்பட்டாள்.

"
ஏண்டி வீட்டுக்குள்ள நுழையும்போதே கூப்பாடு போடறே? என்னாச்சு இப்ப?"

"
நான் ராட்சசி! அதான் கத்துறேன். நீங்க பாட்டுக்கு வரதும், திங்கிறதும், போறதுமா இருந்தா, வீட்டுல நடக்கிற சங்கதி எப்படி தெரியும்? "

"
என்ன சங்கதி தெரியணும் ?"

"
எதுக்கு இப்போ வீடான வீட்டுலே அழுது ஒப்பாரி வைக்குது, உன் ஆத்தாக்காரி?"

அலமேலு வாயடைத்துப்போனாள். அடிப்பாவி! என் சோகத்தை நினைத்து ஒரு துளி கண்ணீர் விடக்கூட அருகதையில்லாதவளாகி விட்டேனே! இதற்கு அவன் என்ன சொல்லப்போகிறானோ? கலவரத்துடன் காதுகளைத் தீட்டிக்கொண்டாள்.

"
சரி, வுடு! வயசாயிட்டுது; ஏதாவது புலம்பிட்டுப் போவுது. நீ ஏன் கண்டுக்கிறே?"

"
வயசானா....? கூறுகெட்டுப்போவுதா?"

"
என்னை இப்போ என்ன பண்ண சொல்லுறே?"

"
வந்து கேளுங்கன்னு சொல்றேன். நான் கல்லாட்டமா இருக்கேன், இன்னும் போய் சேரலன்னு சொல்லுங்க! என்னை மேலோகம் அனுப்பிட்டு ஒப்பாரி வைக்க சொல்லுங்க!"

அவன் விடுவிடுவென்று கொல்லைப்புறம் விரைந்தான். அலமேலு நடுங்கிப்போனாள். அவள் எதிரில் வந்து நின்றவன், ஆவேசத்துடன்,

"
இப்போ என்னாச்சுன்னு அழுவுறியாம்?"எனவும்,

"
ஆமாம், கொஞ்சுங்க!"

ரஞ்சனி பின்னாலிருந்து அபினயம் பிடித்தாள். அவன் எரிச்சலுடன்,

"
நீ கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு இருக்கியா? என்னை கேளு, கேளுன்னு படுத்த வேண்டியது, அப்புறமா பேசவிடாம நீயே பேசுறது!" என்றான்.

அலமேலு துக்கம் தொண்டையை அடைக்க அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள். என்னவென்று சொல்வது?

ஆசை ஆசையாய் வளர்த்த மகனின் அன்பு கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவதையா? பாட்டி, பாட்டி என்று பாசத்துடன் வந்த பேரப்பிள்ளைகளையும் தன்னிடம் வரவிடாமல் செய்த ரஞ்சனியின் துர்போதனையைக் கேட்டு மனம் சஞ்சலப்படுவதையா? அல்லது ஒவ்வாதென்று தெரிந்தும் காலமான காலத்தில் இந்த பாழாய்ப்போன நாக்கு கருவாட்டுக்குழம்புக்கு ஏங்கித் தவிப்பதையா? எதைச் சொல்வது?

அலமேலு பரிதாபத்திற்குரியவளாய் பேச்சிழந்து கண்மூடி அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் குளமாகி, மடை உடைத்த வெள்ளமென கண்ணீர் பெருக, ஒரு நீண்ட கேவல் அவளிடமிருந்து வெளிப்பட்டது. கையாலாகாத அவள் நிலை, கல்லாயிருந்த அவன் நெஞ்சையும் கரைத்துவிட்டது போலும்.
விரைப்புடன் நின்றுகொண்டிருந்த அவன், அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தான். கரிய தோல் போர்த்தப்பட்ட எலும்புக்கூடாயிருந்த அவள் கைகளைப் பற்றினான்.

சற்றே கனிவுடன்,

"
என்னம்மா உன் பிரச்சனை?" என்றான்.

அலமேலுவால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. 'அம்மா' என்றுதான் அழைத்தானா? 'அம்மா' என்றுதானா? 'அம்மா' என்று அழைத்தது அவள் மகன்தானா?

அலமேலுவுக்கு அந்தரத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இது கனவா? நனவா? கடவுளே! கனவானாலும் இந்த இன்பம் போதும்; இது போதும்...உண்மையில் மனம் ஏங்கிக்கிடந்தது கருவாட்டுக்குழம்புக்கல்ல; இந்த இதமான வார்த்தைக்காகத்தான்; இந்த இதமான பற்றுதலுக்காகத்தான். இது போதும்..இது போதும்... அவள் முனகிக்கொண்டாள்.

அவளுடைய வறண்ட, வெளிறிய உதடுகளில் ஒரு புன்னகை பிறந்தது. தோன்றிய புன்னகை நிரந்தரமாய் நிலைத்திருக்க, கண்ணீர் கசிந்த விழிகளின் பார்வை நிலைகுத்தி நிற்க, பற்றிய கரமோ படக்கென்று விழுந்தது.

"
அம்மா!"

அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான், அலமேலு பெற்ற ஆசை மகன்.
 
(படம் உதவி. இணையம்)