29 January 2012

ஆஸ்திரேலியப் பள்ளிகள் - சிறு அறிமுகம் - 2



உயர்நிலைக்கல்வி என்பது ஏழாம் வகுப்பிலிருந்து ஆரம்பம். மொத்தம் எட்டுப் பாடங்கள்.  ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற அடிப்படைப் பாடங்களும், கலை, சமூகவியல், தொழில்நுட்பம், மொழி, சுகாதாரம் மற்றும் உடற்கல்வி போன்ற தொழிற்கல்விப் பாடங்களும் கற்றுத்தரப்படுகின்றன.ஆங்கில வகுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. தாய்மொழியாக ஆங்கிலத்தைக் கொண்டவர்களுக்கு அதீதமாகவும், ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாய்க் கொண்டவர்களுக்கு மிதமாகவும் ஆங்கிலம் கற்றுத்தரப்படுகிறது. ஐந்து தொழிற்கல்விப்பாடங்களிலும் பல பிரிவுகள் உண்டு. அவற்றை பொருள் பிறழாமல் தரும் நோக்குடன் ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன். எல்லாப் பள்ளிகளிலும் எல்லாப்பிரிவுகளும் இருக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும் பெரும்பாலான பள்ளிகள் பெரும்பாலான பிரிவுகளைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பத்துக்கு ஒன்பது பள்ளிகள் இந்த முறையில்தான் கல்வியைப் போதிக்கின்றன. 

1.தொழில்நுட்பம் (Technology) :

1.   Introduction to IT

2.   Advanced IT

3.   Woodwork

4.   Metal craft

5.   Food and culture

6.   Experience with food

7.   People and food

8.   Cake mixing and decoration

9.   Social occasions

10. Gourmet food

11. Textiles

12. Creative crafts and character

13. Aviation A&B

14. robotics


2. மொழி -LOTE ( Language Other Than English)

1.   Japanese A

2.   Japanese E

3.   Japanese

4.   French A

5.   French E

6.   French

7.   Chinese Mandarin

(A – Accelerated, E – Extension)


3. கலை (The Arts):

1.   General art

2.   Drawing

3.   Advanced drawing

4.   Costume and set design

5.   Ceramics

6.   Sculptures

7.   Painting

8.   Print making

9.   Experimental art

10. Drama

11. Media studies

12. Music

13. Advertisements and business graphics

14. Architecture domestic

15. Architecture commercial

16. Visual communication & design

17. Photography

18. Graphics


4. சமூகவியல்(social studies):

1.   Australian History

2.   American History

3.   Asian History

4.   Current issues & global studies

5.   Australian Geography

6.   Environmental geography

7.   Teenagers and law

8.   Money matters

9.   Work life

10. Movies

11. Mind & Meaning


5. சுகாதாரம் மற்றும் உடற்கல்வி (Health & Physical Education)

1.   Human sexuality

2.   Health & Lifestyle

3.   Child development studies

4.   General P.E.

5.   Advanced P.E.

6.   Racquet sports

7.   Handball games

8.   Stickball games

9.   Football games

10. Power sports

11. Sports coaching

12. Leisure studies

13. Outdoor ed. A&B

14. Individual movement

15. Life saving

16. psychology


மேற்குறிப்பிட்ட ஐந்து பிரிவுகளிலிருந்தும் பிரிவுக்கு ஒன்றாக ஐந்து பாடங்களைத் தேர்ந்தெடுத்து ஆறு மாதங்கள் (ஒரு செமஸ்டர்) படிக்க வேண்டும். எதையெதைத் தேர்ந்தெடுப்பது என்பது மாணவனின் விருப்பம். அடுத்த ஆறு மாதங்களுக்கு வேறு ஐந்து பாடங்கள்.ஒருமுறை தேர்ந்தெடுத்தவற்றை மறுமுறை தேர்ந்தெடுக்க இயலாது. படிப்பு என்பது, கோட்பாடு, செய்முறை, செயலறிவு அதற்கான வாய்ப்புகள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இப்படிப் படிப்பதால், பத்தாம் வகுப்பு முடித்த ஒரு மாணவனுக்கு கிட்டத்தட்ட நாற்பது வெவ்வேறு விதமான தொழிற்கல்வியில் பரிச்சயம் உண்டாகியிருக்கும் 

வெறும் ஏட்டுப்படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை மாணவர்கள் உணர்கின்றனர். கண்முன் விரிந்திருக்கும் மாபெரும் உலகில் வாழ இத்தனை வழிகள் இருக்கின்றன என்பதையும் உணர்கின்றனர். ஒரு வேலை போனால் இன்னொன்று என்று வாழமுடியும் என்னும் நம்பிக்கை கொள்கின்றனர். வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் அபாயத்திலிருந்து அறிவுபூர்வமாக வெளியேறுகின்றனர். சுய விருப்பத்துடன் தங்கள் பாதையைத் தாங்களே தேர்வு செய்து மனநிறைவு பெறுகின்றனர் 

இது போன்ற வாய்ப்புகள் வழங்கப்படாதவரை ஒருவர் தன்னிடம் இருக்கும் திறமையை தானே அறிய இயலாமல் போய்விடுகிறது. இதுவரை ஒரு மாணவன் தான் படித்த பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ரிப்போர்ட்களின் அடிப்படையில் அவனுக்கு எதில் அதிக நாட்டம் என்பதும் எதில் அவன் முழுத்திறமையும் வெளிப்படுகிறது என்பதும் தெரியவந்திருக்கும். இந்தப் பாடங்களில் தேர்ச்சி சதவீதம் முக்கியமில்லை. மாணவர்களின் திறனைக் கண்டுபிடித்து வெளிக்கொணர்வதும், அத்திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்குவதுமே ஆசிரியரின் வேலை.  

பத்தாம் வகுப்பில் மாணவர்களைப் பாடாய்ப் படுத்தும் பொதுத்தேர்வு இல்லை என்பதும் வியப்பான உண்மை. பத்தாம் வகுப்பு முடிந்ததும், பள்ளி மாணவர்களில் பாதிபேர் பள்ளியை விட்டு விலகுகின்றனர்.  ஒரு மாணவன் தன் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டிய கட்டம் இது. படிப்பில் அதிக நாட்டமிருக்கும் பிள்ளைகள் பதினொன்றாம் பன்னிரண்டாம் வகுப்புகளுக்குத் தங்களை தயார் செய்து கொள்ள, தொழிற்கல்வியில் நாட்டமிருக்கும் பிள்ளைகள் பள்ளியை விட்டு விலகி, தொழிற்கல்விக் கூடத்தை நாடுகின்றனர். அதனால் மேற்படிப்பான மருத்துவம், பொறியியல் போன்றத் துறைகளில் தேவையற்ற போட்டிகள் தவிர்க்கப்படுகின்றன. அவற்றுக்குத் தேர்வு செய்யப்படும் மதிப்பெண் வெட்டு விவரத்தை பின்வரும் பதிவுகளில் பதிகிறேன் 

தொழிற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்ற மாணவர்கள் ஒன்றிரண்டு வருடங்கள் முறையாகப் பயின்று பட்டயம் பெற்று தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொள்கின்றனர். பெரும்பாலும் பிள்ளைகள் அது ஆணோ, பெண்ணோ, வீட்டை விட்டு வெளியேறும் தருணமும் இதுவே.

 கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து

ஆத்தவிட்டே பறந்து போயிடுத்து

 என்பதுபோல் சுயமாய் சம்பாதிக்கத் துவங்கும் பதினெட்டு வயதில் அவர்கள் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் தங்கள் வாழ்க்கைப்பயணத்தைத் தனித்துத் துவங்குகின்றனர். குடிக்கவும் புகைக்கவும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட வயது அது. இரவு நேர கேளிக்கைகளுக்கும் உல்லாச வாழ்வுக்கும் பெற்றோரின் வீட்டில் இடம் இல்லை என்பதால் அவர்கள் நண்பர்களுடனோ தனித்தோ வாழ்கின்றனர்.


மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு முடியும்வரை அரசின் உதவித்தொகை தொடரும். பெற்றோர் அனுமதித்தால் அவர்கள் தொடர்ந்து பெற்றோருடன் தங்குவர். அல்லது வெளியே தங்கி, பகுதி நேர வேலை செய்து அந்த வருமானத்தைக் கொண்டு தங்கள் மேலதிக செலவுகளைக் கவனித்துக் கொள்வர். இனி அவரவர் வாழ்க்கை அவரவர் கையில். 

நம் நாட்டில் இந்த நிலை இல்லையென்பதை நாம் பெருமையுடன் சொல்லிக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் வளர்ந்து வாழ்க்கையில் செட்டிலான பின் தாய் தந்தையரைக் கைகழுவி விடும் நிலைதான் பல இடங்களில் காணப்படுகிறது. வளரும் பிள்ளைகளைக் கைவிட்ட பெற்றோரைக் காண்பதரிது. படிப்பு மட்டுமல்ல, அதன்பிறகும்  வேலை, திருமணம் என்று பிள்ளைகளைத் தம் தோளிலேயே சுமக்கின்றனர் பெற்றோர். ஆண்பிள்ளையாய் இருக்கும்பட்சத்தில் வேலையில்லையென்றால் சில வீடுகளில் சரியான மரியாதை கிடைக்காது. வேலை தேடுவதில் மும்முரமாயில்லை என்று திட்டும் கிடைக்கும். ஆனாலும் பெற்றோர் தங்கள் கடமையை செய்யத் தவறுவது இல்லை 

ஆஸ்திரேலியா போல் எல்லாத் தொழில்களும் சமமாகப் பார்க்கப்பட்டு, வருமானமும் நிகராக இருந்தால், ஒருவேளை, தங்கள் பிள்ளைகள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் மனமுவந்து வரவேற்கும் நிலை இந்தியாவிலும் இருந்திருக்கும். இங்கோ படித்தவனுக்கு சமுதாயத்தில் இருக்கும் மரியாதையும் அந்தஸ்தும் படிக்காதவனுக்கு இருப்பதில்லை. மேல்நிலையில் உள்ளவனுக்கு இருக்கும் மதிப்பு கடைநிலையில் இருப்பவனுக்கு இருப்பதில்லை.

 ஆஸ்திரேலியாவில் உழைப்புக்குத்தான் மதிப்பே தவிர அவன் படித்தவனா இல்லையா என்பதில் இல்லை. அதேபோல் என்ன வேலை பார்க்கிறாய் என்பது பிரச்சனை இல்லை. வேலை பார்க்கிறாயா என்பதுதான் பிரச்சனை. அதனால்தான் ஒரு கட்டுமானப் பொறியாளரும், உணவகத்தில் எடுபிடிவேலை செய்பவரும் திருமணம் செய்துகொள்ள முடிகிறது. ஒரே பள்ளியில் மருத்துவரின் பிள்ளையும், தச்சரின் பிள்ளையும், சாலைப்பணியாளரின் பிள்ளையும் ஒன்றாகப் படிக்க முடிகிறது. வீட்டில் சகல வசதிகளையும் அனுபவிக்க முடிகிறது. காரணம், உழைப்புக்குக் கிடைக்கும் மரியாதையும், அதற்கேற்ற வருமானமும் 

இங்கு பழுதுபட்ட ஒரு தொலைக்காட்சிப்பெட்டியை பழுதுபார்க்கக் கொடுக்கும் தொகைக்கு சற்றே கூடுதல்தான் ஒரு புதிய தொலைக்காட்சிப் பெட்டி! கைப்பை, செருப்பு இவற்றைத் தைக்கக் கொடுப்பதிலும் புதிதாய் வாங்கிவிடலாம். எல்லாம் தனிமனித உழைப்புக்குக் கொடுக்கப்படும் ஊதியம் 

அந்த மரியாதையும் வருமானமும் நம் நாட்டிலும் எல்லா கடைநிலை ஊழியர்களுக்கும் தரப்பட்டால் தன் பிள்ளை இந்தப் படிப்புதான் படிக்கவேண்டும், இந்த வேலைதான் பார்க்கவேண்டும் என்று எந்தப் பெற்றோரும் வற்புறுத்த மாட்டார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதில் நாட்டமோ அதில்தான் மேம்படுத்த முனைவர். நாளை தன் மகனோ மகளோ கஷ்டப்படக்கூடாது என்று பெற்றவர் நினைப்பதில் தவறில்லையே. அந்தக் கவலை மேலைநாட்டுப் பெற்றோர்களைப் பெரிதும் பாதிப்பதில்லை என்பதுதான் உண்மை. இது உன் வாழ்க்கை. அதில் வரும் பிரச்சனைகளை நீயேதான் சமாளிக்கவேண்டும் என்பதே அதிகபட்ச அறிவுரை. பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக வருந்தி வருந்தி சேமிப்பதோ, குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்களைக் கண்டிப்பதோ, அவர்களுடைய அந்தரங்கத்தில் தலையிட்டு ஆலோசனை வழங்குவதோ இல்லை.

 பெரும்பாலானோர் வாழ்க்கையை அதன் போக்கிலேயே அனுபவிக்கின்றனர். சம்பாதிப்பதும், அனுபவிப்பதுமே அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோள். நாம் அப்படியில்லை. தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் மும்முரத்தில் நம் வாழ்க்கையை வாழத் தவறிவிடுகிறோம். நம் கனவுகளின் மேல் பெற்றோரின் கனவுகள் திணிக்கப்படுகின்றன.  நசுக்கப்பட்ட நம் கனவை மேலெழுப்பி, நம் பிள்ளைகளின் கனவின் மேல் அழுத்தி அதை மூர்ச்சையாக்குகிறோம். நாளை அக்கனவுகள் மேலெழும். அவன் பிள்ளைகளை இம்சிக்கும் 

அவரவர் கனவுகளை அவரவர் வாழ்க்கையிலேயே மெய்ப்படுத்திவிட்டால் காலம் காலமாய் அழுத்தத்தின் பிடியில் அகப்பட்டு அவை அடுத்தத் தலைமுறையின் முதுகு மேல் சவாரி செய்யத் தேவையில்லை. இந்தத் தலைமுறையிலாவது நாம் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் காலந்தவறிய அந்தக் கணக்கை நேர் செய்யமுடியும். நம் பிள்ளைகளை அவர்கள் விரும்பிய துறையில் அனுமதிப்போம். அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்காவிடினும், தடுக்காமல் இருப்போம் 

பெற்றோர் மனம் மாறினாலும் கல்வித்துறையில் மாற்றம் வராதவரை மாணவர்களின் கனவு நனவாகும் சாத்தியம் வெகு குறைவே.


இன்னும் சொல்வேன்.