6 October 2012

கழங்காடுகல்லெனவே…


  
சிறுநதியொன்றின் சன்னப் பிரவாகத்தில்
என் விருப்பமின்றியே கொண்டு சேர்த்தது காலம். 
கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை
வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்
வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது ஆறு.
 
நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
என்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.
 
ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று
கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து
பேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.


*************
படம் உதவி; இணையம்

30 September 2012

பனைமரத்திடலும், பேய்களும்

 
 
 
பள்ளிக்கூடு விடுத்துப் பறக்கும்
பால்யநாட்களின் பகற்பொழுதுகளில்
பட்டாம்பூச்சிச் சிறகுகள் யாவும்
பயத்தால் பின்னிக்கொள்ளும்
பனைமரத்திடல் பார்த்தமாத்திரத்தில்!
 
உச்சிப்பனையில் உட்கார்ந்திருக்கும் பேய்களுக்கு
உச்சிப்பொழுதே உகந்ததென்றும்
அச்சமயம் ஆங்கு நடமாடுவோரை,
கொடுங்கரங்களால் பாய்ந்து பற்றி,
கோரைப்பல்லால் கவ்விக்கொல்லுமென்றும்
பலியானவரில் ஒருவர்
தன் பக்கத்து வீட்டு மாமாவென்றும்
விழிவிரிய பாக்கியலட்சுமி சொன்னதெல்லாம்
வழித்துணையாய் வந்து பாடாய்ப்படுத்தும்.
 
சடசடவென்று சத்தமிட்டபடி,
படபடக்கும் ஓலைகளைப் பற்றித்தொங்கியபடி
வா வாவென்று பேய்கள் யாவும்
வரவேற்பதுபோல் தோன்ற....
 
தோளில் தொத்திக்கொண்டு
உடல் அழுத்தும் பயத்தை
எந்தக் கடவுள் பெயரால் விரட்டுவது
என்று புரியாமல் நொடிப்பொழுது குழம்பி,
 
அம்மா அறிமுகப்படுத்திய அம்மனைக் கொஞ்சமும்,
பள்ளியில் பரிட்சயமான
பரலோகத்திலிருக்கும் பரமபிதாவைக் கொஞ்சமும்
எதற்கும் இருக்கட்டுமென்று அல்லாவையும் கொஞ்சம்
அவசரமாய்த் துணைக்கழைத்தபடி
கண் இறுக்கி, காது பொத்தி,
கணவேகத்தில் கடக்கமுயலும்போதெல்லாம்
காற்றுக்கு வந்துவிடும் உற்சாகம்!
 
புழுதிகிளப்பியபடி, குப்பைகளால் கும்மியடிக்க,
வெக்கை தணிக்கும் வேகம் கொண்டதுபோல்
பனைமரம் யாவும் பக்கமிருக்கும் பழுத்த ஓலைகளால்
பலத்த சத்தத்துடன் விசிறிக்கொள்ள,
 
விழுந்தடித்துக்கொண்டு ஓடும் வேகத்தில்
கருவேலமோ, நெருஞ்சியோ
பாதம் கிழிக்கும் சுரணையுமற்று
வீடு வந்து சேர்ந்து,
விட்டிருந்த மூச்சைத் திரும்பப் பெற்றதொரு காலம்.
 
வாழ்க்கைப்பட்டு வேற்றூர் புகுந்து,
வாழ்க்கைப்பள்ளியில் வருடம் சில கழிந்து,
அச்சங்களின் ஆணிவேர்
அசைக்கப்பட்டுவிட்டிருந்தத் தருணமொன்றில்...
பரவசம் எதிர்நோக்க,
பனைமரத்திடல் கடந்தபோது பகீரென்றது!
 
மரங்களற்ற திடல் மயான அமைதி கொண்டிருக்க,
தகரப் பலகையொன்று தனித்து நின்றிருந்தது,
அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்
அவசர வருகை சுட்டி!
 
மருகிய மனத்திடையே எழுகிறது ஓர் ஐயம்.
பறவைகளைப்போலவே பனைமரப்பேய்களும்
இனி குந்த இடமின்றி குமைந்துபோமோ?

16 September 2012

அம்மா என்றொரு மனுஷி

 
 
புதிய திரைப்படமொன்றின்
திருட்டுப்பிரதியினைப் பார்வையிட
கூடத்தில் அனைவரும் கூடியிருக்கும் வேளையிலும்
உணவு தயாரிக்கும் உரிமை மட்டும்
எக்காரணம் கொண்டும் எவராலும் பறிக்கப்படாமல்
அவளிடமே அதீதமாய் விட்டுவைக்கப்படுகிறது.
 
முன்தினம்முதலாய் குளிர்சுரம் கண்டு
கம்பளிக்குள் முடங்கி நடுங்கி,
பினத்திக்கொண்டிருந்தவள்,
மாத்திரை முழுங்கிய மறுகணமே
பரவாயில்லை இப்போதென்று சொல்லி
பட்டென எழுந்துகொள்வாளென்று
எல்லோராலும் அனுமானிக்கப்படுகிறது.
 
குற்றாலத்துக்கு குடும்பத்துடன்போக
மகிழுந்து பேசி மற்றவரெல்லாம் ஏறியபின்
அவளொருத்திக்கு மட்டும் இடமில்லையென்பது
இறுதிகணத்தில் தெரியவர....
'நானிருக்கேனே வீட்டில்!'
வழக்கம்போலவே அந்த வாசகம் 
அவள் வாயிலிருந்தே வரவேண்டுமென்று
உளமாற வேண்டப்படுகிறது.
 
அவளது ஒப்புதலின்றி
எதுவும் செய்வதில்லையென்ற
அப்பாவின் பிரதாபப் பேச்சுக்குமுன்
ஊமையாகிப் போகின்றன,
பலவந்தமாய்ப் புறக்கணிக்கப்பட்ட
அவளது எதிர்ப்புகளும், மறுப்புகளும்.
 
இத்தனைக்குப் பின்னும்
இயந்திரமனுஷியாய் இல்லாமல்
புன்னகையுடனும் புத்துணர்வுடனும்
அன்றாடம் வலம்வரவேண்டுமென்று அனைவராலும்
அதிகபட்சமாய் எதிர்பார்க்கப்படுகிறது.

12 September 2012

அடைகோழி கருப்பி

 
 
 
குறுகுறுக்கும் பார்வையை அங்குமிங்கும் ஏவி,
குறைக்கேவலொன்றை வெகு அமர்த்தலாய்க் கேவி
கூட்டுமூலையோரம் மீண்டும் மீண்டும்
வந்து அமர்ந்துகொள்கிறது அடைகோழி கருப்பி.
 
விரட்ட விரட்ட போக்குக் காட்டி
மறுபடியும் அடைய வந்ததை
ஆத்திரத்துடன் துரத்தியமுக்குகிறாள் ஆச்சி.
 
படபடக்கும் இறக்கையினின்று ஒற்றை இறகு பிய்த்து
அலகில் அலகுக்குத்த முயல்பவளை,
ஆக்ரோஷம் காட்டி அலைக்கழிக்கிறது கருப்பி.
 
முட்டைகளை அபகரித்தாய், போதாதா?
மூக்குத்தியிட்டு என் மென்தவம் களைத்து
மறுகருத்தரிப்புக்கு விரட்டுகிறாயே
மனுஷியா நீயென்று மூர்க்கம் காட்டுகிறது
தன் முரட்டுக்கேவலில்.
 
ஆச்சிக்கும் கருப்பிக்கும் இடையில் நடக்கும்
போராட்டத்தைப் பார்த்தபடி பாயில் கிடக்கிறாள்
பத்துநாளுக்குமுன் பிள்ளைபெற்ற பாதகத்தி ஒருத்தி.
 
கண்மலரா பச்சிளம்சிசுவின் வாயில்
கள்ளிப்பால் புகட்டப்பட்டக் கடைசித் தருணத்திலும்
கருப்பியின் ரோஷத்தில் கடுகளவும் காட்டத்தவறியவளின்
செவிவழி நுழைந்து அவள் கருப்பையைக்
கொத்திக்குதறிக் கிழிக்கிறது
கருப்பியின் கோரக் கொக்கரிப்பு!
 
 
 

4 September 2012

இனியவன் என் இணையவன்


 
  
என் இதயத்தில் உலாவரும்
என் இணையவனுக்காய் உலாவருகிறது
இணையத்திலோர் இன்கவியொன்று! 
 
என்னோடு ஊடுபவனும் அவனே!
ஊடி, காதல் உறவாடுபவனும் அவனே!
உணர்வினில் ஊடுருவி என்
உயிரணைபவனும் அவனே!
உறவினூடே எனை உயர்த்தி
உளம் நிறைபவனும் அவனே!

 மனையிலமர்த்தியது போதாதென்று
பொன்னரியணையிலும் அமர்த்திட
பொல்லாத ஆசைகொண்டு இழைக்கிறான்
தன் உழைப்பினாலொரு சிம்மாசனம்!
களைப்பின்றி எழுதிக்கொண்டேயிருக்கிறான்
நாளெல்லாம் தன் நேசத்தின் நீள்சாசனம்!
 
குடும்பவிளக்கின் அழகு
கூடத்து இருப்பென்றிருந்தேன்.
குன்றத்து ஒளிர்தலே
பெண்குலத்திற்கு அழகென்றே
மன்றத்திலேற்றிவைத்தான்;
தன் மனதிலும் ஏத்திவைத்தான்!
 
பொருள்வயிற்பிரியும் செயலும்
ஆடவர்க்கியல்பென்றறிந்தும்
இயல்பறுத்தென்னை யாண்டும்
இணைத்தழைத்துச் செல்கிறான்,
லும் எம்மால் எள்ளற்பொறுத்தல்
இயலாது பிரிவின் இன்னற்பொறுத்தலென்றே
இனிதாய் விடைபகர்கிறான்.
 
நாலும் என்னை அறியச் செய்கிறான்,
நானே என்னை அறியச் செய்கிறான்,
நானாய் என்னை இயங்கச் செய்கிறான்,
நாளும் என்னை உவக்கச் செய்கிறான்.
 
எந்நாளும் தன்னலம் மறக்கிறான்,
என்னலத்தைத் தன்னலம் என்கிறான்,
என்னுறவு தன்னுறவு எனும் பேதமற்று
எவ்வுறவும் நம்முறவு என்று பரிகிறான்.
 
அகிலத்தைச் சுழற்றிவிடுகிறான்,
அழகாய் என் விரல்நுனியில் பொருத்தி!
சகலமும் நீயேயென்று சரணடைகிறேன்,
அவனை என் நெஞ்சத்தில் இருத்தி!
 
தொழில்நுட்ப உலகைப்
பரிச்சயமாக்குகிறான் எனக்கு!
தொல்லையில்லா உலகைப்
பரிசாக்குகிறேன் அவனுக்கு!
வாழ்க்கைப் பாதையின் முட்கள் அகற்றியபடி
முன்னால் நடக்கிறான் அவன்,
செருக்கோடும் காதற்பெருக்கோடும்
செம்மாந்து பின்தொடர்கிறேன் நான்!
 
என் எழுத்தை வியந்துபோற்றும் வாசகன்!
என் கருத்தை நயந்துவியக்கும் நாயகன்!
என்னால் முடியுமாவென்றே
உன்னி முடிப்பதற்குள்
உன்னால் முடியுமென்றழுந்தச்சொல்லி
உணர்வாலும் செயலாலும் உந்துபவன்! 

அண்ணனும் தம்பியுமாய்
ஆருயிர் தோழனும் தந்தையுமாய்
ஆசைக் கணவனும் காதலனுமாய்
அவனிருப்பே எனக்கு ஆயிரம் படைக்கலம்!
அவன் தயவால்தானே இன்றெனக்கு
அவனியும் அஞ்சறைப்பெட்டியுள் அடைக்கலம்! 
 
அச்சிலேற்றவியலாக் கவிதைகள்
ஆயிரமாயிரம் அவனுக்காய் புனைந்திருந்தும்
எச்சமாயொன்று எழுந்ததேன் இக்கவியரங்கம்? 

இருபதாண்டு நிறைவில் இனிக்கும்
என்மனநிறைவின் பரிசாய் இருக்கட்டுமே
என் மனவாழம் தோண்டிய அன்பின் கவிச்சுரங்கம்!
 *****************************************
(இருபதாவது திருமண நாளை நேற்றுக் கொண்டாடித் திளைத்த மகிழ்வில் எழுதியது)

29 August 2012

அரைநூற்றாண்டு கழித்து வந்துசேர்ந்த காதல்கடிதம்



 
 

முக்கால் நூற்றாண்டுக்குப் பின் நூலகம் வந்த புத்தகத்தைப் பற்றி முன்பு பார்த்தோம். நூலகத்தின் பத்திரிகைகளுக்கிடையில் சிக்கியிருந்த கடிதமொன்று அரை நூற்றாண்டுக்குப் பின் உரியவரைத் தேடிவந்தக் கதை தெரியுமா உங்களுக்கு? அதுவும் சாதாரணக் கடிதம் அல்ல, காதல் கடிதம்.
 

கிட்டத்தட்ட 53 வருடங்களுக்கு முன் காதலி வான்னி தன் காதலன் க்ளார்க்குக்கு (அதுதான் அவர் பெயர்) எழுதிய கடிதம் அது. கல்லூரி திரும்புமுன் ஏன் தன்னை தொலைபேசியில் அழைத்துப் பேசலைன்னு வருத்தப்பட்டு கேட்டு எழுதியிருக்காங்க. ஆனால் அந்தக் கடிதம் க்ளார்க்கை என்ன காரணத்தாலோ வந்தடையவே இல்லை.
 

அவரும் படிப்பை முடிச்சிட்டு, ஊருக்கு வந்து தனக்காகக் காத்திருந்த வான்னியைக் கல்யாணமும் செய்து,  சேர்ந்து வாழ்ந்து,  நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, பின் விவாகரத்தும் பெற்று விட்டாராம். அதோடு இல்லை, அவர் மதம் மாறி முகம்மது சித்திக்காகவும் மாறிவிட்டாராம். சென்றவருடம்  அவரைத் தேடி வந்தடைந்திருக்கிறது அக்கடிதம்.
 

நான்கு ஒரு சென்ட் அஞ்சல்தலைகளைத் தாங்கி 1958 ஆம் வருட முத்திரையை ஏற்று நிற்கும் அக்கடிதம் பென்சில்வேனியாவிலிருக்கும் கலிஃபோர்னியப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல் பெட்டிக்கு சிலவாரங்கள் முன்புதான் வந்து சேர்ந்திருக்கிறது. வியப்புக்குரிய கடிதம் பற்றி ஊடகங்கள் வாயிலாக அறிந்த அவருடைய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் தற்போது இண்டியானாபோலிஸில் வசிக்கும் 74 வயதான சித்திக்கிடம் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த செய்தியைக் கேட்ட சித்திக் சொல்லமுடியாத உணர்வுக்கலவையில் மிதக்கிறதா சொன்னாராம். இதை நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கடிதத்தின் மேல் அத்தனையொன்றும் ஆர்வமில்லை, இருந்தாலும் ஒரு குறுகுறுப்போடக் காத்திருக்கிறேன்என்று சொன்னாராம்.
 

எல்லாம் சரி, கடிதத்தை உரியவர் பிரித்துப் பார்க்குமுன்பே அது ஒரு காதல் கடிதம் என்று எப்படித் தெரியும்னு யோசிக்கிறீங்களா? அதிலிருக்கும் அஞ்சல் தலைகளை வைத்துதான். காதலர்களுக்கென்று பிரத்யேக அஞ்சல்தலைகளான்னு ஆச்சர்யப்படாதீங்க. எல்லோரும் உபயோகிக்கும் பொதுவான அஞ்சல்தலைகள்தாம் அவை. ஆனால் அவற்றைத் தலைகீழாய் ஒட்டினால் அது காதலின் அடையாளமாம். (காதல் வந்தாலே தலைகால் புரியாதுன்னு இதை வைத்துதான் சொல்றாங்களோ?)
 

தலைகீழ் மட்டுமில்லை, அஞ்சல் தலையின் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பொருள் உண்டாம். சொல்லவா?
 

நேராக இருந்தால் - வியாபார விஷயம். 

தலைகீழாய் இருந்தால் - காதல், தனிமை, தாபம் 

தலைப்பகுதி வலப்பக்கம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - அன்பு முத்தங்கள்

தலைப்பகுதி இடப்புறம் பார்த்தபடி கிடைமட்டமாக இருந்தால் - நான் உன்னை விட்டு நீங்கவே மாட்டேன் 

மூலைவிட்டத்தை முன்னிறுத்தி அஞ்சல் தலையின் மேற்பகுதி வலப்பக்கம் பார்த்திருந்தால் - என்னைத் திருமணம் செய்துகொள்வாயா? 

அதற்கு எதிர்திசையில் அதாவது தலை இடப்பக்கம் பார்த்தபடி இருந்தால் - உன்னை மணப்பது உறுதி.
 

பாருங்க, அந்தநாளிலேயே அமெரிக்கக் காதலர்கள் அஞ்சல்தலைகளை ஒட்டுவதிலேயே சங்கேத மொழியை உருவாக்கிக் காதலித்திருக்காங்க.
 

எங்க கிளம்பிட்டீங்க? கடிதம் எழுதத்தானே? இந்த முறையில் தபால் தலைகளை ஒட்டுமுன் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வச்சிக்கணும். யாருக்கு எழுதறீங்களோ அவங்களுக்கும் இந்த சங்கேத மொழி புரிஞ்சிருக்கணும். இல்லைன்னா.... முதலுக்கே மோசமாகிடும். (ஆமா, ஒரு ஸ்டாம்ப் கூட ஒழுங்கா ஒட்டத்தெரியல, இதையெல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டு....) 
 

இன்னும் ஒரு விஷயம், இந்திய அஞ்சல்துறை இம்மாதிரிக் கோணல்மாணலா  அஞ்சல்தலைகள் ஒட்டப்பட்டக் கடிதங்களை நிராகரிச்சிட்டா, அப்புறம் என்னைத் திட்டக்கூடாது. சரியா?
 

காதலுக்காக அஞ்சல் தலைகள் பற்றிப் பார்த்தோம். அஞ்சல் தலைகளைக் காதலிக்கிறவங்களைப் பற்றித் தெரியுமா? அஞ்சல் தலை சேமிப்பில் ஈடுபடுகிறவங்களோடு பேசிப்பாருங்க, புரியும். அஞ்சல்தலைகள் சேகரிப்பிலும், பன்னாட்டு நாணயங்கள் சேகரிப்பிலும் எனக்கும் தீராத ஆர்வம் உண்டு. கடந்த இருபத்தைந்து வருடங்களா சேகரிக்கிறேன். மும்முரமா இல்லைன்னாலும், அவ்வப்போது கிடைப்பதை. நல்ல உற்சாகமான பொழுதுபோக்கு அது.
 
**************************************************************
நன்றி: யாஹூ செய்திகள் (ஜூலை 16, 2011)